பின் தொடரும் நிழலின் குரல்

 பின் தொடரும் நிழலின் குரல்

ஆனால் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெற்ற குழந்தைகள் கொல்கிறார்கள், கொல்லப்படுகிறார்கள். அதிகாரங்களைக் கட்டியெழுப்பு கிறார்கள். அவற்றை எதிர்த்துப் புரட்சியும் செய்கிறார்கள். அவர்களுடைய வியர்வையும் ரத்தமும் பூமியைப் புரட்டிப் புரட்டிப் போடுகின்றன. சம்பந்தமற்ற வேறு ஓர் உலகில் கருணையுடன் சமைத்துப் பசியாற்றி, தட்டித் தூங்கவைத்து, அபயமும் தைரியமும் தந்து இவர்கள் வாழ்கிறார்கள். அன்னையரை இணைத்துக்கொள்ளும்போதுதான் புரட்சி தோற்கடிக்க முடியாததாக ஆகிறது என்று கார்க்கி கருதினான். கொந்தளிப்பு மேலோட்டமானது என்றும் அமைதியான ஆழமே சிருஷ்டிகரமானது என்றும் அவன் அறிந்திருந்தான்போலும். பாவம் கார்க்கி. அது வெறும் கனவாகப் போயிற்று. உலகின் எந்தப் புரட்சியிலும், எந்த ஆட்சியிலும், பெண்கள் பங்கேற்றதில்லை. போல்ஷவிக் புரட்சியும் அது போலத்தான். அது பெண்களைப் பயன்படுத்தியது. ஆனால் அது ஆண்களின் உலகில் நடந்த புரட்சி. உலகில் இதுவரை நடந்த அத்தனை அரசியல் சம்பவங்களும் அலைகள். நடந்து முடிந்த கற்பழிக்கப்பட்டுள்ளார்கள். கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அனாதையாக்கப்பட்டிருக்கிறார்கள். 'நமது பெண்கள் வீரப் புதல்வர்களைப் பெறட்டும். ' ஸ்டாலின் சொன்னது. ராணுவம் நகர்கையில் பின்னணியில் கூடாரக் கட்டுகளை இழுக்கும் வண்டிகளும், அதற்குப் பின்னால் உணவாகப்போகும் மிருகங்களும், அதற்குப் பின்னால் மிருகங்களின் உணவும் நகரும் என்பார்கள். அதற்குப் பின்னால் ராணுவத்தைப் புணர்ந்து ராணுவத்தைப் பெற்றெடுக்கும் யோனியேந்திய பெண்கள் நகர்கிறார்கள். ராணுவம்தான் உலகில் இன்றுவரை அரசியலாக இருந்துள்ளது. போரிடும் ராணுவம், பேசும் ராணுவம். அங்கு நுழையும் பெண்கள் தங்களையும் ஆண்களாக மாற்றிக் கொண்டவர்கள். ஆண்களின் சீருடைகளை அணிந்த பெண்சிப்பாய்கள். ஆண்குரலில் அடித்தொண்டையில் சொற்பெருக்காற்றும் மக்கள் பிரதிநிதிகள். அன்னையராக, தங்கள் இயல்பான மென்மையுடனும் கருணையுடனும், அவர்கள் அங்கு நுழைய முடிவதில்லை. பெண்களால் நடத்தப்பட்டால் புரட்சிகள் இவ்வாறு ரத்தவாடை வீசியிருக்குமா? கண்டிப்பாக இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டிருக்காது. ஆண்களின் அமைப்புகளும் அரசுகளும் ஆண்களைப்போலவே இருக்கின்றன. வெளித் தோற்றத்தில் இரும்புக் கோட்டைகள். உள்ளே நெளிந்து உருகும் லாவா. ஆண்களால் நடத்தப்படும் புரட்சிகள் அவர்களுடைய உடலில் காமம் வெளிப்படும் விதத்தையே கொண்டுள்ளன. எழுச்சி, பின் படிப்படியாக உத்வேகம், உச்சகட்ட வெடிப்பு, பின்பு சோர்வு. பெண்களின் புரட்சி ஒரு முழுமையை நோக்கி நகரும் சிறிய அலைகளின் வட்டங்களாக இருக்கலாம். அவர்களுடைய அரசாங்கம் மென்மையான தசைகளாலும் உதிர நீரினாலும் கட்டப்பட்ட கருப்பை போலிருக்கலாம். எல்லா எதிர்மறைகளையும் செரித்துக் கொள்ளும் உயிர்த்துடிப்புடன், தன்னுள்ளிருந்து இன்னொன்றைப் பிறப்பித்து வளர்த்து முடிவின்றி நீண்டு பெருகுவதாக இருக்கலாம். அதை ஒருபோதும் ஆண்கள் புரிந்துகொண்டதில்லை. மார்க்ஸ்... லெனின்... ஸ்டாலின்... அவர்களா? வேடிக்கைதான். ஹெலன் டெமுத்தை படுக்கையறைக்குப் பயன்படுத்திவிட்டுக் கூசாமல் தூக்கியெறிந்த மார்க்ஸுக்கு ஜென்னிமீது என்ன மரியாதை இருந்திருக்க முடியும்? பிரெஞ்சுக் காதலிக்காக குரூப்ஸ்கயாவை துரத்திவிடத் தயாராக இருந்த லெனினுக்குப் பெண்கள் மாற்றியணியும் உடைகளன்றி வேறு என்ன? ஸ்டாலின் தன் மனைவியைக் கொன்றவர். இவை முதலாளித்துவ அவதூறுகள். இவற்றை நம்புகிறேனா? இல்லை நம்பவில்லை. ஆனால்... கார்க்கி மட்டும் என்ன? தன் கனவில் உருவான புரட்சிக்கு ஒரு அன்னையின் ஆசியும் பங்கேற்பும் தேவை என்று மட்டும்தானே அவரும் எண்ணினார். பாவெலின் துண்டுப் பிரசுரங்களைச் சுமந்து செல்பவள்தானே அன்னை? அன்னையின் புரட்சிபற்றி அவர் அறியவில்லை. பெண்களுக்கு என்று ஒரு தனிப் புரட்சித்தன்மை இருக்கக்கூடும் என்று அவர் ஊகிக்கவில்லை. இவை புரட்சிகள் அல்ல. இவை உள்ளூரப் பெரும் இடைவெளிகளால் அவதிப்படும் எளிய மனிதர்களின் அதிகார விளையாட்டுகள். கருவில் எதையும் சுமந்து வளர்க்க முடியாத அர்த்தமற்ற உடல்கள் வெறும் வெளியில் தங்கள் தூலங்களை ஊதிப் பெருக்கிக்கொள்ள செய்யும் ஜம்பம். தாங்களே எழுதிக்கொள்ளும் வரலாற்றில் தங்கள் பெயரை அடிக்கோடிட ஆண்கள் கொள்ளும் முண்டியடித்தல். மூடத்தனம் மூடத்தனம்... இவர்களுக்குப் பின்னால் மெளனமாக கருச்சுமந்து, பால் ஊட்டி, மானுட குலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது பெண்மை. அது நிலம். அதில் முளைத்த மரங்கள் கைநீட்டிக் கூத்தாடுகின்றன. வானை அள்ளிவிடுவோம் என்று கனவு காண்கின்றன. ஒன்றோடு ஒன்று உரசி அழிகின்றன. மிகுந்த கருணையுடன் இந்த இரண்டாயிரம் ஆண்டுகாலத் திமிர் விளையாட்டை பெண்மை சகித்து வந்துள்ளது.'காயங்களுக்குக் கட்டுப்போட்டு, ஆறுதலும் ஊக்கமும் அளித்து, உணவூட்டி, கருக்கொண்டு போஷித்து வருகிறது. ஆனால் அதற்குத் தெரியும். சிவனும் விஷ்ணுவும் சக்தியின் இரு துளிகள். சிருஷ்டி ஸ்திதி சம்கார விளையாட்டு அவர்களுடைய பலவீனங்களின் விளைவு. அவள் மிக பிரமாண்டமாக அவர்களைப் பார்த்தபடி விலகி : இருக்கும் ஒரு மௌனவெளி. ஆதிசக்தி.

Comments

Popular posts from this blog

ஓசூர் கவிதை ரசனை முகாம் 2025

கவிஞர் இசை அமர்வு: எப்படி எழுந்தனவோ

கவிஞர் மதார் அமர்வு - கவிதையில் சொல்லாட்சிகள்