"பிறகேன் இப்படி அழுதாய் என்று கேள்”.
"சொல் பாலு".
"உன் மேல்தான் தியாகு எனக்கு வருத்தம்".
"ஏன்?"
"கடைசிக் காலத்தில் எனக்கு ஒரு லட்சியத்தைக் கொடுத்து விட்டாயே என்றுதான்”.
"முன்பே சொன்னேன்...”
"இல்லை தியாகு, நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். இதை நினைத்து நினைத்துதான் நான் வருத்தப்படுகிறேன். எப்படியும் வாழலாம் என்று வாழ்ந்து கொண்டிருந்தவன் நான். அப்போது இந்தச் சாவு வந்திருக்கக் கூடாதா? இப்படித்தான் வாழ வேண்டும் என்று உன்னிடமிருந்து கற்றுக் கொண்டேன். அப்படி வாழ முடியாமல் சாவு குறுக்கிடுகிறதே என்ற கவலைதான் என்னை வாட்டுகிறது தியாகு. எவ்வளவு முயன்றும் என்னால் இந்தச் சிந்தனையிலிருந்து விடுபட முடியவில்லை”.
பாலுவின் கண்களில் மீண்டும் கண்ணீர்ப் பெருக்கு. துடைத்து விடும்போது என் கண்கள் ஈரமாகி இரண்டே இரண்டு துளிக் கண்ணீர், எச்சரிக்கையாகி, பாலு பார்ப்பதற்கு முன் துடைத்து விட்டு, இயல்பாய்ப் பேச முற்பட்டேன்.
பாலு என்னைப் பேச விடவில்லை.
''தியாகு, எனக்கு ஒரு சந்தேகம்'.
''கேள்”.
"மறுபிறப்பு என்கிறார்களே... அது உண்மையா?"
“என்ன பாலு, இப்படிக் கேட்கிறாய்? அதெல்லாம் பொய், சுத்தப் பொய்”.
“அது எனக்குத் தெரியும். ஆனால் ஒரு ஆசை, அப்படி ஒன்று இருக்கக் கூடாதா?"
''ஏன்?''
"மறுபிறப்பு இருக்குமானால், அந்த மறுபிறப்பில் நான் உன் பிள்ளையாகத்தான் பிறப்பேன். நீ என்னை மீண்டும் ஒரு பாலகிருஷ்ணனாகவே வளர்த்தெடுக்க வேண்டும். என்னை எப்படி வளர்க்க நினைத்தாயோ, அப்படி"
எனக்குப் பேச வார்த்தைகள் இல்லை. வார்த்தைகள் என்ன, வாயசைக்கும் திறனே இல்லை. பாலுவின் கைகளை இறுகப் பற்றி அழுத்திக் கொண்டு அப்படியே சிறிது நேரம் அமைதியாக நின்றேன். கைகள் வழியே அவருக்கோர் உறுதி கொடுத்தேன் என்று அவர் புரிந்து கொண்டார் போலும். முகம் மலர்ந்து சிரித்தார். சிரித்த முகம் மாறுமுன் விடைபெற எண்ணினேன். மெல்லக் கைகளை விடுவித்துக் கொண்டு, நான் கையசைக்க, அவரும் கையசைக்க... மௌனமாய் விடைபெற்று, விருட்டென்று திரும்பி வேகமாய்க் கண்டத்தை விட்டு வெளியே வந்தேன். வாசலைத் தாண்டியதும் கீழே உட்கார்ந்து கைக்குள் முகம் புதைத்து அழுது தீர்த்தேன்.
அந்தநாள் - சிறை முழுவதையும் சோகம் அப்பிக்கிடந்தது. சிறைக் கைதிகள் அனைவரும் மௌனமாய் அழுதுகொண்டிருந்தனர். தொழிலகங்கள் மூடிக் கிடந்தன. வேலை செய்யவோ, செய்யச் சொல்லவோ யாருமில்லை.
தூக்குமேடை (சக்கி) சிறை வாயிலுக்குப் பக்கமாய் பழைய கண்டத்துக்குப் பின்னால் இருந்தது. பாலகிருஷ்ணனை அன்று மாலையே சி.பி. கண்டத்திலிருந்து பழைய, கொண்டுவந்து அடைத்து, நாளை விடியற்காலையில் பழைய கண்டத்துக்குக் கண்டத்திலிருந்து சக்கிக்குக் கொண்டு செல்வார்கள் என்று கேள்விப்பட்டோம்.
அன்றுமாலை ‘லாக்கப்' நேரத்தில் நல்ல மழை. பாலகிருஷ்ணனை சி.பி. கண்டத்திலேயே பூட்டி விட்டார்கள். இரவு 7.30 சுமாருக்கு மழை விட்டது. 8 மணி சுமாருக்கு காவலர் படை சூழ ஜெயிலர் சி.பி. கண்டத்துக்குச் சென்று பாலகிருஷ்ணனின் அறையைத் திறக்கச் செய்தார். திறந்தவுடன் ஒரு காவலர் கைவிலங்குடன் பாலுவை நெருங்கினார். பாலகிருஷ்ணன் சொன்னார்:
“வேண்டாம்... எனக்கு விலங்கு போடாதீர்கள். காலையில் சக்கிக்குப் போகும் போதுதான் போடவேண்டும் என்று சட்டம்”.
ஜெயிலர் அதை ஏற்றுக் கொண்டார். பாலகிருஷ்ணன் சொன்னார்:
“காவலர்கள் சற்று விலகியே நிற்கட்டும். யாரும் என்னை நெருங்கி வருவதோ என்மேல் கை வைப்பதோ எனக்குப் பிடிக்காது. நான் ஓடிப்போகாமல் பாதுகாப்பதுதான் நோக்கம் என்றால், என்னைச் சுற்றி வளையமாக வந்தால் போதுமே?"
சொல்லிவிட்டுச் சிரித்தார். தப்பிச் செல்வதா? அந்தச் சூழலில் அந்த இடத்திலிருந்தா? வேடிக்கையான கற்பனைதான்! ஜெயிலர் அதை ஏற்றுக்கொண்டு காவலர்களை விலகி நிற்கச் செய்தார்.
பாலகிருஷ்ணன் ஒவ்வொரு கொட்டடியாகச் சென்று கண்டத்து நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் கைகுலுக்கி விடை பெற்றார் - பிரியா விடையன்று. நிரந்தரமாய்ப் பிரியும் விடை. பிறகு தன் கொட்டடி வாயிலில் நின்று முழக்கங்கள் எழுப்பினார்:
"சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் -வாழ்க!
அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை - வீழ்க!
சிறைப்படுத்தப்பட்டோர் ஒற்றுமை - ஓங்குக!
ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம்!
செங்கொடி - வாழ்க!”
இரவு நேரத்துக்கும் காற்றில் நிலவிய ஈரப் பதத்துக்கும் சிறையைக் கவ்வியிருந்த கனத்த மௌனத்துக்கும், பாலுவின் முழக்கங்கள் எங்கள் மெயின் கண்டத்துக் கொட்டடிகள் வரை கேட்டன. உண்மையில் அவை சிறை முழுக்கக் கேட்டிருக்க வேண்டும். முழக்கம் எழுப்பிக் கொண்டே பாலு கண்டத்தை விட்டு வெளியே வர, சி.பி. பகுதியில் வைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்டுக் கட்சித் தோழர்கள் (விலைவாசிப் போராட்டக் கைதிகள்) முழக்கம் எழுப்பலானார்கள்:
“வீர வணக்கம், வீர வணக்கம் - தோழர் பாலு, வீர வணக்கம்!”
இன்னும் பல முழக்கங்கள், பாலு சி.பி. வாயிலைத் தாண்டும் வரை இந்த முழக்கங்கள் கேட்டன. பிறகு மறுபடியும் பாலுவின் முழக்கங்கள் அவர் இரண்டாம் தொகுதிக்கு நேராக வரும்போது, தொகுதிக்குள் அடைபட்டிருந்த கைதிகள் முழக்கம் எழுப்பத் தொடங்கினார்கள்.
"சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் - வாழ்க!”
அதிகாரவர்க்க அடக்குமுறை - வீழ்க!'
வீர வணக்கம், வீர வணக்கம்-எங்கள் பாலு, வீர வணக்கம்!"
முழக்கங்கள் காற்றினும் கடிதாய்த் தொகுதி தொகுதியாகப் பரவி, சிறைக் கைதிகள் அனைவரும் இதேபோல் முழக்கங்கள் எழுப்பத் தொடங்கினார்கள்.
இந்த முழக்கங்கள் ஓய்ந்தபோது, மீண்டும் பாலுவின் குரலில் முழக்கங்கள் கேட்டு ஓய்ந்தன. அவர் பழைய கண்டத்துக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார் என்று புரிந்தது.
இரவு பத்து மணி சுமாருக்கு பாலுவிடமிருந்து ஒரு வாய் மொழித் தகவலும் ஒரு துண்டுக் கடிதமும் எங்களுக்கு வந்து சேர்ந்தன. வாய்மொழித் தகவல் - எங்களைத் தைரியமாக இருக்கச் சொல்லி! துண்டுக் கடிதத்தில் தன் இறுதி விருப்பத்தை எழுதியிருந்தார் - முறையாகச் சொன்னால் அதுதான் அவரது உயில். சிறைக்கு வந்தபின் தன்னுள் விதைக்கப்பட்ட சமூக உணர்வு. அதன் வளர்ச்சியில் ஏ.ஜி.கே.யும் நாங்களும் வகித்த பங்கு. அவரது அந்த ஒரே வருத்தம், செங்கொடி போர்த்தித் தொழிலாளி வர்க்கத்தினரால் தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற ஆசை... யாவற்றையும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். அதே கடிதத்தை நகல் எடுத்துச் சிறை அதிகாரிகள் வாயிலாக அரசுக்கும் குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் என் அக்காள் காந்திக்கும் அனுப்ப அதிகாரிகளைக் கேட்கும்படி பதில் சொல்லி அனுப்பினோம். அவ்வாறு செய்து முடித்துவிட்டுத் தூங்கப் போய்விட்டார் என்று இரவு 12 மணிக்குத் தகவல் கிடைத்தது.
செப்டெம்பர் 25 - விடியற்காலை 4.30 சுமாருக்கு பாலகிருஷ்ணனை உறக்கத்திலிருந்து எழுப்பி விட்டார்கள். அதிலிருந்து இறுதிச் சடங்குகள் ஆரம்பமாகிவிட்டன. உயிருடன் இருக்கும்போதே இறுதிச் சடங்குகள்!
காலைக் கடன்கள் யாவற்றையும் அதற்குள்ளேயே முடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அறைக்குள்ளேயே வெந்நீர்க் குளியல், பிறகு புத்தாடை அணிய வேண்டும் - கைதிச் சீருடைதான்.
“கடவுள் வழிபாடு, பூசை ஏதாவது செய்ய விரும்புகிறாயா?”
“இல்லை... எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை”
“ஏதாவது மதகுருமார் உதவி வேண்டுமா?”
"வேண்டாம். எனக்கு மதம் இல்லை”
"கடைசியாக ஏதாவது சாப்பிட விரும்பினால் கேள்".
“வேண்டாம், எதுவும் தேவையில்லை”.
“பால், ரொட்டி"
"பால் மட்டும் போதும். சர்க்கரை கொஞ்சம் தூக்கலாக, அதுதான் எனக்குப் பிடிக்கும்".
பால் குடித்து முடித்தார் பாலு. கண்காணிப்பாளர் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டு நின்றார், கொஞ்ச நேரம் இருந்தது. பாலு அறைக்குள்ளேயே அமர்ந்து கொண்டார். காவலர்களும் தண்டனைக் காவலர்களும் கம்பியோரம் வந்து பாலுவைப் பார்த்துச் சென்று கொண்டிருந்தார்கள்.
மரண தண்டனை நிறைவேற்ற ஆணையில் தூக்கிலிட வேண்டிய நாள் குறிக்கப்பட்டிருக்குமே தவிர, நேரம் குறிக்கப்பட்டிருக்காது. குறிப்பிட்ட நாளில் விடிந்தவுடன் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் தூக்கிலிட வேண்டும் என்பது சிறை விதி. ஆனால், விடிந்தும் விடியாத நேரத்தில் தூக்கிலிடுவதுதான் நடைமுறை.
சரியாகக் காலை 5.30 உயிரோடு பாலுவின் இறுதிப் பயணம் தொடங்கிற்று. அறைக்குள்ளேயே அவருக்கு விலங்கு பூட்டினர். கைகளை முதுகுக்குப் பின்னால் வைத்து விலங்கிட்டனர். முகத்தை மறைக்கும் கறுப்புத் துணியுடன் கூடிய கறுப்புக் குல்லாய் மாட்டப் பட்டு, அப்போதைக்கு முகம் திறந்து வைக்கப்பட்டது.
பழைய கண்டத்துக்கும் சக்கிக்கும் இடையே சில அடி தூரம்தான். அந்தத் தொலைவுக்குள் பாலு முழக்கங்கள் எழுப்பியபடி நடந்தார் - இரவு எழுப்பிய அதே முழக்கங்கள்:
“சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் - வாழ்க!
செங்கொடி வாழ்க!'
திடீரென்று சத்தம் நின்றது. சக்கி வாசலில் அவர் நிறுத்தப் பட்டார். கண்காணிப்பாளர், ஜெயிலர், மாவட்ட மருத்துவ அதிகாரி, சிறை அதிகாரி, சிறை மருத்துவர்கள், நிர்வாக நடுவர் என்ற முறையில் வட்டாட்சியர், மற்றும் பல அதிகாரிகளும் காவலர்களும் குழுமியிருந்தார்கள். கடைசி நேரத்தில் தப்புவதற்கோ, கைதியை மீட்டுச் செல்வதற்கோ முயற்சி நடந்தால் முறியடிப்பதற்காக, சக்கியறையின் முன்பக்கம் பத்துக் காவலர்கள் துப்பாக்கி சகிதம் ஆயத்தமாய் நின்றார்கள்.
மரண தண்டனை நிறைவேற்ற ஆணையைக் கண்காணிப்பாளர் ஆங்கிலத்தில் படித்தார், ஜெயிலர் அதைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னார். பிறகு அலுவலகத் தலைமைக் காவலர் நம்பியாரிடம் ஜெயிலர் ஏதோ சைகை செய்தார்.
நம்பியார் இந்தச் சைகையைப் புரிந்து கொண்டார். தூக்கிலிடு வதற்கு முன் கைதியின் அங்க மச்ச அடையாளங்களை (Idedntifiocation Marks) கண்காணிப்பாளரும் ஜெயிலரும் சரிபார்த்து இவர்தான் அவர் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சிறை விதி. நம்பியாருக்கும் இந்த விதி தெரியும்.
பாலகிருஷ்ணன் நிற்பது சக்கி வாசல் - உருக்கொத்த உள்ளங்களைக் கூடப் பஞ்சாக்கிப் பறக்க வைக்கும் வாசல், உண்மையிலேயே மரண வாசல், சக்கி வாசலில் நிறுத்தி பாலகிருஷ்ணன்தான்
பாலகிருஷ்ணனா என்று சரிபார்க்கப் போகிறார்கள். இவர் அவரல்ல என்று தெரிந்து, விட்டு விடுவார்களோ?
பாலுவை நெருங்கிய நம்பியார் ஒரு மச்சத்தைத் தேடி சட்டடையைத் தொட்டதுதான் தாமதம், ஒங்கி எழுந்தது பாலுவின் குரல்:
“மச்ச அடையாளமாவது, மண்ணாங்கட்டி அடையாளமாவது? நான்தான் பாலகிருஷ்ணன், அடிச்சுத் தூக்கியெறி..."
நம்பியார் அரண்டு போய்ப் பின்வாங்க, கண்காணிப்பாளர் - ‘அதுபோதும்’ என்று சைகை செய்து விட்டார்.
பாலுவின் முகம் மூடப்பட்டு சக்கி வாசல் திறக்கப்பட்டது. தூக்குக் கைதி தூக்கு மரத்தைப் பார்க்கக் கூடாது என்று விதி. பாலு தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டார். மூத்த காவலர் ஒருவர் அவசரமாய் அவரைச் சரியான இடத்தில் நிறுத்தி, கைகள் அசையாதபடி சேர்த்துப் பட்டைக் கட்டுக் கட்டினார். அதேபோல் கணுக்கால்களையும் சேர்த்துப் பட்டைக் கட்டுக் கட்டினார். அதேபோது மற்றொரு காவலர் சுருக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டி சற்றே இறுக்கிச் சரியான நிலையில் வைத்தார்.
மற்றொரு தலைமைக் காவலர் (இவர்தான் executioner - தூக்கிலிடுபவர்) 'லீவரில்' கை வைத்துத் தயாராய் நின்றார். கண்காணிப்பாளரின் விரல் அசைவுக்காக அவர் காத்திருந்தார். (இந்த லீவர் என்பது இரயில் நிலையங்களில் கைகாட்டி மரத்தை இயக்குவதற்குள்ள லீவரைப் போலவே இருக்கும்).
இவ்வளவுக்கும் ஒரு நிமிடம்கூட ஆகாது. சில விநாடிகள்தான். தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டவுடனே பாலு முழக்கம் எழுப்பினார்:
"செங்கொடி - வாழ்க!
செங்கொடி - வாழ்க!'
இரண்டு முறை ஆயிற்று. மூன்றாவது முறை பாதி முழக்கம் தான் முடிந்திருந்தது.
“செங்கொடி - ... "
கண்காணிப்பாளரின் விரலசைவுக்குத் தலைமைக் காவலர் 'லீவரை' இழுக்க, மேடைக் கதவுகள் இரண்டும் சட்டென்று கீழ்வாங்க... 'பொடக்’... ஐயகோ! எல்லாம் முடிந்து போயிற்று. பாலுவின் முழக்கங்கள் எங்களுக்குத் துல்லியமாகக் கேட்டுக் கொண்டிருந்ததால், அந்த முடிவை உடனே எங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது.
லெனினும் நானும் அவரவர் கொட்டடிகளில் பிரமை பிடித்தாற் போல் உட்கார்ந்திருந்தோம். எங்களை அறியாமலே கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. திறந்துவிடப்பட்ட பின் மற்ற தோழர்கள் வந்து எங்களுக்கு ஆறுதல் சொல்லி வெளியே அழைத்து வந்தார்கள்.
விதிப்படி பாலுவின் உடல் அரை மணி நேரம் தூக்குக் கிணற்றுக்குள் தொங்கிக் கொண்டிருந்தது. பிறகு மருத்துவ அதிகாரி ‘உயிர் இருக்கிறதா?' என்று பரிசோதித்து 'உயிர் போய்விட்டது' என்று சான்றளித்தபின், சடலம் எடுக்கப்பட்டு சக்கியறையில் கிடத்தப்பட்டு, சிறிது நேரம் கழித்து பாலுவின் தந்தையிடம் ஒப்பம் பெற்று ஒப்படைக்கப்பட்டது.
இரயில்வே தொழிலாளர்களும் இதர பிரிவுத் தொழிலாளர்களுமாக நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து, பாலு விரும்பியபடியே அவர் உடலுக்குச் செங்கொடி போர்த்தி, சடல வண்டியிலும் செங்கொடிகள் கட்டி ஊர்வலமாய்க் கொண்டுசென்று பொன்மலை அருகே அடக்கம் செய்தார்கள்.
தோழர் பாலகிருஷ்ணன் தூக்கிலிடப்பட்டதோடு என் சிறை வாழ்க்கையில் கிட்டத்தட்ட கால் பங்கு முடிவுறுகிறது.
ஆனால், என் சிறை வாழ்க்கை முழுவதிலும் பாலுவின் வீர நினைவுகள் என்னைத் தொடர்ந்து இயக்கின. அதன் பிறகும்கூட நான் செய்கிற ஒவ்வொன்றிலும் - இலட்சியப் பயணத்தில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் - என் பாலுவின் சுவடுகள் பதிவதாகவே எண்ணிக் கொள்கிறேன்.
எண்பதுகளில் திருச்சி மத்திய சிறையில் நாங்கள் நடத்தி வந்த ‘சுதந்திர தாகம்' என்ற மாதமிருமுறைக் கையேட்டில் பாலுவைப் பற்றித் தோழர் லெனின் ஒரு கட்டுரை எழுதினார். அதற்குத் தலைப்பு தரும்படி என்னைப் பணித்தார். நான் கொடுத்த தலைப்பு: "அந்தியில் உதித்த ஆதவன்!”
சிறையிலிருந்து விடுதலையான பின் நான் எழுதி வெளிவந்த முதல் நூல்: நெல்சன் மண்டேலா - சிறையிலும் வாடாத கறுப்பு மலர் பாலகிருஷ்ணன் வீர நினைவுக்குச் சமர்ப்பணம் செய்தேன்.
பாலுவுக்காகக் கண்ணீர் விட்டு அழுதவன் நான். பாலுவைப் பற்றி சொல்லக்கேட்டு அழுதவர்கள் பலர் உண்டு. இவ்வளவு காலத்துக்குப் பிறகும் எப்போதாவது பாலுவின் நினைவுகள் என் கண்ணீரைக் கேட்பதுண்டு. ஆனால், உறுதியாக ஒன்றைச் சொல்வேன். அந்த உண்மை வீரனுக்கு உண்மையான அஞ்சலி - கண்ணீர் அல்ல! ஒடுக்குமுறையை நொறுக்குதல்! உரிமை, விடுதலை! அவற்றை நோக்கிய போர்ப் பயணம்!
---------------------------------------------------------
ம் - ஷோபா சக்தி:
பனைத் தீவு:
கிறிஸ்துவுக்குப் பின் ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்து இரண்டாம் வருடமும் டிசம்பர் மாதத்தின் ஒரு பனிக்காலச் சாமத்தில் கடவுளின் குமாரன் அந்தப் பனைத் தீவில் பிறப்பதற்கு ஏற்பாடாகியிருந்தது. வட சமுத்திரத்தில் அலைந்துகொண்டிருக்கும் ஏழு சின்னத் தீவுகளில் ஒல்லாந்துக் கடற்கோட்டையிலிருந்து அரைக் கடல் மைல் எட்டத்தில் மிதந்த பனைத்தீவில் மீட்பனின் வருகைக்காகப் பெருத்த ஆரவாரத்துடன் கன்னிமரியாளின் பீடத்தைச் சனங்கள் அலங்கரிக்கலானார்கள்.
முன்பெல்லாம் ஏசுபாலனின் பிறப்பைச் சோடனை செய்வதற்காக அதிகாலையிலேயே ஒரு கூட்டம் இளைஞர்கள் தோணிகளில் காரைதீவு கசுரினா கடற்கரைக்குப் புறப்பட்டுப் போவார்கள். கசுரினா கடற்கரையில் வரிசையாக நிற்கும் சவுக்கம் மரங்களின் கொப்புகளைத் தறித்துத் தோணிகளில் கட்டி பனைத்தீவுக்கு இழுத்து வருவார்கள். அந்தச் சவுக்கம் கொப்புகளை அச்சு அசலாக நத்தார் மரங்களைப் போலவே நுட்பத்துடன் சிதைத்துப் பாலன் கூட்டையும், ஆலயத்தின் தூண்களையும், வெண்ணிறச் சுவர்களையும் அலங்கரிப்பார்கள். இப்போதெல்லாம் காரைதீவுக்குள்ளேயே போக முடியாதபடி இலங்கைக் கடற்படையின் தளம் - இங்கே 26, 27 மற்றும் 34வது படையணிகள் நிலைகொண்டிருக்கின்றன - காரைதீவுக்குள் மெல்ல மெல்ல விரிந்து இறுதியில் சவுக்கம் மரங்களையும் விழுங்கிக் கொண்டது.
பாலன் கூடு:
இந்த வருடம் தீவின் அரசாங்கப் பாடசாலையைச் சூழக் காடு பற்றிக் கிடந்த செவ்வரளிப் புதர்களிடையே புகுந்த இளைஞர்கள் செவ்வரளிக் கொப்புகளை வெட்டி வந்து வனைந்தார்கள். மண்குழிக் குட்டையில் வெட்டிப் பெயர்த்தெடுக்கப்பட்ட பசும்புற்கள் பாளம் பாளமாகப் பாலன் கூட்டினுள் அடுக்கப்பட்டன. ஒரு மெல்லிய வைக்கோல் கற்றை பாலன் கூட்டின் உள்ளும் புறமுமாகப்
பிய்த்தெறியப்பட்டது. பலூன்களாலும் சிறிய மின்குமிழ்களாலும் செவ்வரளிக் கொப்புகள் ஆபாசமாகச் சோடிக்கப்பட்டன. பின் பாலன் கூட்டின் உச்சியில் சம்மனசானவரைச் சணல் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டார்கள். கன்னிமரியாள் பொம்மையும், சூசையப்பு பொம்மையும் பாலன் கூட்டினுள் வைக்கப்பட்டன. வெற்றுத் தேயிலை பெட்டி, அலுமினியத் தாளில் வெட்டப்பட்டிருந்த வால் நட்சத்திரம் மரியாளுக்கும் சூசையப்புவுக்கும் நட்டடுவாகக் குத்திட்டு இறங்க வால் நட்சத்திரத்தின் பின்னால் வந்து சேர்ந்த கீழ்த்திசை இராசாக்கள் மூவரும் தங்கள் பொக்கிசங்களைத் திறந்து பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப் போளத்தையும் காணிக்கையாக்கினார்கள்.
மெசியா:
விழாக் காலங்களில் தேவாலயத்தைச் சூழவும் தொங்க விடப்படும் நிறங்கள் ஒளிரும் வெளிச்சக் கூடுகளைக் கடந்த நான்கு வருடங்களாகவே தமிழீழத்தின் சட்டம், ஒழுங்கு நீதி ஆகியன பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சிறிலங்காவின் முப்படைகளிடமும் கையளிக்கப்பட்டதிலிருந்து சனங்கள் அவித்து விட்டிருந்தார்கள். அந்தத் தீவைச் சதா காலமும் சுற்றித் திரியும் கடற்படைப் படகுகள் பெரும் வெளிச்சங்களைக் கண்டால் தீவுக்குள் நுழையக்கூடும் என அவர்கள் அச்சமுற்றிருந்தார்கள். ஒரு தெந்தெட்டான வெளிச்சத்தில் தான் மெசியா இன்று பிறக்கப்போகிறார்.
பலிப்பூசையின் ஆயத்த மணிகள் கிளர்த்தப்படலாயின. தொடர்ந்து மரியாயின் சேனை வருகைப் பாடலைப் பாடியது. அந்தப் பாடலின் மெட்டு ஒரு பிரபலமான சிங்கள பைலாப் பாடலின் மெட்டிலிருந்து திருடப்பட்டிருந்தது. பின்பு பாதிரி பிரசங்கிக்கத் தொடங்கினான். அந்தப் பாதிரி நடுத்தர வயதுள்ளவனாகக் காணப்பட்டான், அவன் ஒல்லியாகவும் தேகத்தில் சுண்டினால் இரத்தம் கன்றும் நிறமாகவும் இருந்தான். சிரைக்க மழிக்கப்பட்டிருந்த அவனது செக்கச் செவேலென்ற சிறிய மூஞ்சி பலிப்பீடத்தில் எரிந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்திகளின் ஒளியில் சுவாலையாய்க் கனல்கிறது. அவன் உருவேறி சனங்களுக்கு ஆவேசத்துடன் பிரசங்கித்தான்.
பாதிரிகள் இப்போதெல்லாம் சிலேடை, அங்கதம் இரட்டைக்கிளவி, இடக்கரடக்கல் எனத் தமிழ் மொழியின் எல்லாப் பொற்பங்களையும் பிரயோகித்துப் பிரசங்கிக்கத் தொடங்கிவிட்டார்கள். 'இது என்னே ஒரு முக்கியமான காலம்! தொலைவில் வெளிச்சம் புள்ளியாய் ஒளிர்கிறது. அது பிரகாசிக்கட்டும்! இதோ எல்லா ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். பயப்படாதிருங்கள்! ஆயிரம் ஆண்டுகளாய் நாம் காத்திருந்த மீட்பர் தோன்றிவிட்டார். விடுதலைக்கான நாட்கள் நெருங்குகின்றன. புஜங்களிலே நுகத்தடியைக் காவித் திரியும் ஜனங்கள் எழுவீர்! அடிமையாய் கிடந்த நாட்கள் மறையும் என்று மெய்யிலும் மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்' இப்படியாக ஆரம்பத்திலிருந்தே சிலேடை பேசிய பாதிரி கதையோடு கதையாக ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை' என்று காசி. ஆனந்தனின் உணர்ச்சி நறுக்கொன்றைத் தனது பிரசங்கத்துக்குள் சொருகிய கணத்தில் ஆலயத்தின் இடதுபுற வரிசைகள் கலையலாயின.
சிறி லும்பினி:
பாதிரி கண்களை மூடி மதுக்கோப்பையைத் தூக்கிக் காட்டி ‘இது உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தம்’ என்ற போது தேவாலயத்தின் வலது புறத்தில் முழந்தாளிட்டு நின்றவர்களிடையே ஒரு செய்தி பரவியது ‘பள்ளதிக்கு பற்றி எரியுதாம்' பாதிரி அப்பத்தைப் பிய்த்தபோது ஆலயத்தின் இடதுபுறத்தில் யாரும் இருக்கவில்லை. அவர்கள் தெருக்களாலும் ஒழுங்கைகளுக்குள்ளாலும் தீ நாக்குகள் எழும் திக்கை நோக்கி அரற்றியவாறும் குழறியவாறும் ஓடிக் கொண்டிருந்தார்கள். வீட்டு வேலிகளையும் தோட்டக் காணிகளையும் தாண்டிக் குதித்து குறுக்கு வழிகளால் ஓடி வந்த இளைஞர்கள் தான் முதலில் வந்து சேர்ந்தார்கள். பவுத்த பாடசாலையான ‘சிறி லும்பினி வித்யாலாயா' பற்றி எரிந்துகொண்டிருந்தது.
தாவீது:
அந்தப் பவுத்த பாடசாலையைச் சூழவுள்ள குடிசைகளில் சீவிக்கும் இளைஞர்களில் பலரும், சில முதியவர்களும் இரவில் பாடசாலைக் கட்டடத்துள் படுப்பதுண்டு. இன்று எல்லோரும் நத்தார் பூசை காணக் கோயிலுக்குப் போயிருக்கையில் மிகவும் கவனமாகத் திட்டமிட்டுப் பாடசாலையைப் பற்ற வைத்திருக்கிறார்கள். இன்று தாவீதுக் கிழவர் மட்டும் தான் தட்டத் தனியனாகப் பாடசாலைக்குள் படுத்துக்கிடந்திருக்கிறார். அவரால் ஆலயம் இருக்கும் தொலைவுக்கு நடக்க முடியாது. அந்த நோயாளிக் கிழவரை இழுத்துவந்து பனை மரத்தோடு சேர்த்துக் கயிற்றால் கட்டிவிட்டுப் பாடசாலையை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொழுத்தியிருக்கிறார்கள்.
லாசர்:
தாவீதுக் கிழவர் நடுங்கிக் கிடந்தார். அவருக்குப் பேர நா எழுவதாய் இல்லை. வியர்வையில் பஞ்சைத் தேகம் நனைந்து கிடக்க அவர் கண்கள் பயத்தினுள் மறைந்திருந்தன. கரவெட்டி சிறி நாரதா பவுத்த பாடசாலை, அல்வாய் சேமஹே பவுத்த பாடசாலை, புத்தூர் பன்யாசீக பவுத்த பாடசாலை ஆகியவற்றைத் தமிழ்ப் போராளிகள் தாக்கினார்கள், தாக்க முற்பட்டார்கள் என்றெல்லாம் உண்மைகளும் வதந்திகளும் பரவிக் கிடந்த காலமது. ஆகவே இந்த பவுத்த பாடசாலையையும் யாராவது போராளிகளே கொழுத்தி விட்டுச் சென்றிருக்கலாம் என இளைஞர்கள் சந்தேகமுற்றனர். லாசர் தான் தாவீதுக் கிழவரைப் பிடித்து உலுக்கினான்.
புலிப்படை:
'சொல் தாவீது அப்பா யார் பள்ளிக்கூடத்தைக் கொழுத்தியவர்கள்? நீ அவர்களை அடையாளம் கண்டாயா? தங்களை அவர்கள் புலிப்படைப் பொடியள் என்று சொல்லிக் கொண்டார்களா?' கிழவர் அலங்க மலங்க விழிகளைப் புரட்டினார். புலிப்படைப் பொடியள் என்ற சொல்லையே தன் வாழ்நாளில் இப்போது தான் அவர் முதல் முறையாகக் கேட்டிருக்கக்கூடும். தாவீதுக் கிழவர் வாயினுள் ஏதோ முணுமுணுத்தார். லாசர் மறுபடியும் கேட்டான் ‘யார் புலிப்படைப் பொடியளா?' கிழவர் மெதுவாக வாயைத் திறந்தார் ‘இல்லை வெள்ளாம் பொடியள்'.
நயினா தவு புத்த விகாரை:
சடாரென ஒரு நிசப்தம் எழ பாடசாலையின் முகட்டுச் சலாகைகள் தீயில் சடசடவென ஒலியெழுப்பித் தெறித்து வீழ்ந்தன. இரண்டு இளைஞர்கள் இரவோடு இரவாகத் தோணியில் கிளம்பி செய்தியைச் சொல்ல நயினாதீவு புத்த விகாரைக்குப் போயினர். தண்ணீர் குடித்துவிட்டு தாவீதுக் கிழவர் சொன்னார் 'இரண்டு பேர் வந்து கொழுத்தினார்கள். அவர்களில் ஒருவனை என்னால் அடையாளம் காண முடியவில்லை. மற்றவன் ஏர்னஸ்ட் வாத்தியாரின் மகன். அந்த சுவாமிக்குப் படித்த பொடியன்'.
நேசகுமாரன்:
‘யார் நேசகுமாரனா? அந்தத் தாயோளித் தறுதலை முன்பும் ஒரு தடவை இறங்குதுறையில் வைத்து ஆமத்துறுக்களை மிரட்டியுள்ளான். அம்மட்ட சிறி அவனைக் கொத்தாமல் விடுவதில்லை' என செபரத்தினம் பதறினான். இளைஞர்கள் தண்ணீர் ஊற்றித் தீயை அணைத்துக்கொண்டிருக்க அவர்களில் இருவர் நேசகுமாரன் தான் தங்களது முதலாம் எதிரி என்பதாய் இரகசியம் பறைந்தார்கள். அவர்கள் எதிர்வரும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாய் நேசகுமாரனை வெட்டிச் சரிப்பதாகச் சபதம் செய்தார்கள். சிறி லும்பினி வித்தியாலாயா தணிந்த போது மீட்பர் பிறந்துவிட்டார் என்பதற்கு அடையாளமாகப் பனைத்தீவின் தோமையப்பர் ஆலயத்தில் ஊர்க் 'குடிமகன்' வைத்தியின் பறைமேளம் தட்டப்பட்டது.
---------------------------------------------------------
Comments
Post a Comment