புதுச்சேரி தாமரைக்கண்ணன் அமர்வு - தமிழ் சந்தப்பாடல்கள் மரபு
சந்தப்பாடல்கள் மரபு
விவாதத்திற்கான முன்குறிப்பு:
தமிழ் இசைப்பாடல் மரபில் சந்தப்பாடல்களுக்கென்று முக்கியமான இடமுண்டு. அதிக அளவில் சந்தப்பாடல்களை இயற்றி இம்மரபை பெரிதும் வளர்த்தவர் அருணகிரிநாதர். இன்று எளிதில் அணுகக்கூடிய திருப்புகழ் பாடல்கள் அன்றி, தமிழ் மரபிலக்கியத்தில் ஓசைநயம் மிக்க பாடல்களை இயற்றிய ஏனைய புலவர் மரபை அறிமுகப்படுத்தும் விதமாக இங்கு காரைக்காலம்மை, ஒட்டக்கூத்தர், தாயுமானவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், குரவை இராமானுச தாசர் ஆகிய ஐந்து கவிஞர்களின் பாடல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சந்தப்பாடல்கள் 1 : தக்கயாகப்பரணி
-ஒட்டக்கூத்தர்
பரணியில் காப்புப்பாடல்களையடுத்து கடை திறப்பு. வெவ்வேறு இடங்களது பெண்களையும்
கடை திறக்க அழைக்கிறார் கூத்தர்.
முடிதுமெனமறை முதலியபரவவும்
முறிதுமெனநிசி
சரர்குலமிரியவும்
முரிதுமெனவெழு
குலகிரிகுலையவும்
முளிதுமெனவெழு
புணரிகண்மறுகவும்
மடிதுமெனமகி தலநிலைதளரவும்
மறிதுமெனவடி சுரபதிவருடவும்
வரதனொருதமிழ்
முனிவரன்வரவரு
மலயவரையர மகளிர்கடிறமினோ
ஏனைய அடிகள்
- தனன தனதன தனதன தனதன
ஈற்றடி - தனன
தனாதன தனதன தனதனா
முடிதும் என மறை
முதலிய பரவவும்
முறிதும் என நிசிசரர்
குலம் இரியவும்
முரிதும் என எழு
குலகிரி குலையவும்
முளிதும் என எழு
புணரிகள் மறுகவும்
மடிதும் என மகிதலம்
நிலை தளரவும்
மறிதும் என அடி
சுரபதி வருடவும்
வரதன் ஒரு தமிழ்
முனிவரன் வரவரும்
மலய வரை அரமகளிர்கள்
திறமினோ
பொருள்: தனது பொருளை முற்றும்
உணர்ந்தவன் என்று வேதங்கள் முதலான சாத்திரங்கள் புகழவும், நாம் அழிந்தோம் என அரக்கர்
குலம் கலைந்தோடவும், விந்தியனை வீழ்த்தியது போல நாமும் வீழ்வோமென மலைகள் குலையவும்,
நம்மை வற்றச்செய்வானோ இவன் என ஏழு கடல்களும் வருந்தவும், இவனால் நாம் மீண்டும் அரசாள்வோம்
( விருத்திரனை அழிப்பதால் ) என்று இந்திரன் கால்களை வருபவனும் ஆகிய அருளும் தமிழ் முனிவர்
அகத்தியர் இராசராசபுரிக்கு வர அவருடன் வரும் பொதியமலையின் அழகிய பெண்களே வாசல் திறவுங்கள்..
சந்தப்பாடல்கள் 2 : நூற்றெட்டு
திருப்பதி திருப்புகழ் - குரவை இராமானுச தாசர்
( தந்தத் தனதன
தனதன தந்த
தந்தத் தனதன தனதன
தந்த
தந்தத் தனதன தனதன
தந்தத் தனதானா )
எந்தத்திசையினு
மணுவினு மண்டத்
தந்தத் தினுமுள
னெவனவ னுங்கட்
கெங்கட் கிறையென
மகனை வெகுண்டத் தறிகீறி
எஞ்சப் பொருபடை
யிரணிய நெஞ்சைத்
துண்டப் படமுனை
யுகிர்கொடி டந்திட்
டின்பப் ப்ரியமொடு
குடர்கள் பிடுங்கிப் புனைவோனே
சந்தத் தடவள வயலின்ம
ருங்கிற்
செங்கட் கடைசியர்
குரவை முழங்கச்
சந்தித் திளமுடி
நடவு நடுங்கைத் தொடியோசை
சந்தக் களியளி
யிசையினும் விஞ்சக்
கம்பித் தழகெழும்
வளமலி செம்பொற்
றஞ்சைப் பதிவரு மழகிய சிங்கப் பெருமாளே.
எந்தத்திசையினும் அணுவினும்
அண்டத்து
அந்தத்தினும்
உளன் எவனவன் உங்கட்கு
எங்கட்கு இறையென மகனை வெகுண்டு அத்தறிகீறி
எஞ்சப் பொருபடை
இரணிய நெஞ்சைத்
துண்டப் படமுனை
உகிர் கொடி இடந்திட்டு
இன்பப் ப்ரியமொடு
குடர்கள் பிடுங்கிப் புனைவோனே
சந்தத் தடவள வயலின்
மருங்கிற்
செங்கட் கடைசியர்
குரவை முழங்கச்
சந்தித்து இளமுடி நடவு நடுங்கைத் தொடியோசை
சந்தக் களி அளியிசையினும்
விஞ்சக்
கம்பித் தழகெழும்
வளமலி செம்பொன்
தஞ்சைப் பதிவரு
மழகிய சிங்கப் பெருமாளே.
பொருள்:
நமக்கெல்லாம்
இறைவனான திருமால் எல்லாத்திசையிலும் உள்ள அணுவிலும் உள்ளான், அண்டங்களுக்கெல்லாம் முடிவிலும்
அவனே உள்ளவன் என்று சொல்கிறாயே அவன் எவன் என்று இரணியன் வெகுண்டு கதையால் தூணை பிளக்க
அவனை வீழ்த்தி நெஞ்சை பிளந்து வெறிகொண்டு அவனது குடலை பிடுங்கி அணிகளாக அணிந்தவனே
!
வளமிக்க வயலின்
இருபுறத்திலும் அழகிய கண்கொண்ட உழத்தியர் குரவை முழங்கி நாற்றுக்கட்டுகளை எடுத்து நடவு
நாடும் வளையோசை சந்தம் மிகுந்த கவியிசையை விஞ்சும் ஆர்த்து அழகெழும் வளம்நிறை தஞ்சை
பதியில் உள்ள சிங்கப்பெருமாளே ( திருப்பதியாகிய தஞ்சை யாளியின் இறைவனே )
சந்தப்பாடல்கள் 3 : மூத்த
திருப்பதிகம், பதினோராம் திருமுறை, காரைக்காலம்மை
துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம்
உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு
தகுணிதம் துந்துபி தாளம்வீணை
மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங்
குடமுழா மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும்எங்கள்
அப்பன் இடந்திரு ஆலங்காடே
ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி
ஒன்றினை ஒன்றடித் தொக்கலித்துப்
பப்பினை யிட்டுப் பகண்டை யாடப்
பாடிருந் தந்நரி யாழ்அமைப்ப
அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள்
அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார்
சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே
சந்தப்பாடல்கள் 4 : வண்ணம்
- தாயுமானவர்
அருஎன் பனவும்அன்றி உருஎன் பனவும் அன்றி
அகமும் புறமும் அன்றி-முறைபிறழாது
குறியும் குணமும் அன்றி நிறைவும் குறைவும் அன்றி
மறை ஒன்று எனவிளம்ப-விமலமதுவாகி
அசலம்பெற உயர்ந்து, விபுலம் பெற வளர்ந்து
சபலம்சபலமென்று உன்அறிவினர் காண
-
ஞான வெளியிடை மேவும் உயிராய்.
சந்தம் : (தனனதனன தன்ன
தனனதனன தன்ன
தனனதனன தன்னதன தனதான)
அருவமானவைகள் என்று சொல்லப்படுவனவும் அல்லாமல், உருவமானவைகள்
என்று சொல்லப்படுவனவும் அல்லாமல், உள்ளே இருப்பது, வெளியே இருப்பது என்று சொல்வதற்கும்
இடம் இல்லாமல், நியதியில் தப்பாமல் தனக்கென ஓர் அடையாளமும், தனக்கென ஒரு குணமும் இல்லாமல்,
குறைந்திருந்து நிறைதலும், நிறைந்திருந்து குறைதலும் இல்லாமல்; வேதங்கள் ஒன்றே ஒன்று
சொல்ல, நின்மலமாகிப் போக்குவரவில்லாமல் உயர்ந்து, பசு பாசங்களைக் காட்டிலும் மேன்மையுற
வளர்ந்து, இலாபம் இலாபம் என்று மனத்தில் நினைக்கின்ற அறிஞர்கள் திருவருளைக் கொண்டு
தரிசிக்கும்படி சிதாகாயத்தில் (ஞான வெளியில்) எழுந்தருளியிருக் கின்ற பரமான்மா இறைவன்.
அனல் ஒன் றிட எரிந்து புகை மண்டிடுவது அன்று;
புனல்ஒன் றிடஅமிழ்ந்து-மடிவிலது ஊதை
சருவும் பொழுது உயர்ந்து சலனம் படுவதுஅன்று;
சமர் கொண்டு அழிவது அன்றுஓர்-இயல்பினது ஆகும்;
அவன்என்பதுவும் அன்றி அவள்என் பதுவும் அன்றி,
அது என்பதுவும் அன்றி-எழில்கொடு உலாவும்
-ஆரும்நிலை அறியாதபடியே.
சந்தம் : (தனதன்னன தனந்த தனதன்னன தனன்ன
தனதன்னன தனந்த தனதன தான)
பரமான்மா நெருப்பு சூழ எரிந்து, புகைமிகுவதும் அன்று. நீரானது சூழ அதனுள் அழுந்தி அழிதலும் இல்லாதது.
காற்று மோதும் போது மேல்கிளம்பி அசைவினை அடைவதும் அன்று. யுத்தத்தின் காரணமாக மடிந்துபோனதும்
அன்று. எக்காலத்தும் ஒரே தன்மையைக் கொண்டு விளங்குவதாகும். அவன் என (ஆணாகச் சுட்டி
அறிவதற்கு) இயலாமலும், அவள் என (பெண்ணாகச் சுட்டி அறிவதற்கு) இயலாமலும், அது என (அலியாகச்
சுட்டியறிவதற்கு) இயலாமலும் எத்தன்மையரும் (அப்பரமான்மாவின் உண்மை நிலைமையை) அறியாவண்ணம்
(திருவருளாகிய) அழகு மிகுந்து உலாவிவரும்.
சந்தப்பாடல்கள் 5 : குமரகுருபரன் திருவகுப்பு, முருகதாசர்
திக்காய கரமலர்கள் எட்டோடு நிலவுமொரு
சித்தேசன் நுதல்விழியில் வருசிறிய பாலனோ
சிற்றாடை யணியுமயில் ஒத்தாடும் இமயமகள்
செப்பாடு முலையில்வரும் அமுத நிகர் வாயனோ
திட்டாண்மை யொடுபகைமை
உற்றாரும் உயஅருள்தி
திக்காரன் அமரரெதிர் புகழுமுதல் வீரனோ....
..முட்போலும் எயிறுறுப ணிச்சேனை அடுசிகியில்
மொய்த்தோகை நிழலில்உல கினைவளையும் வேலனோ
முத்தீனும் வளைபலதெ ருத்தோறும் நனியுலவு
முத்தாலு நகரில்வளர் குமரகுரு நாதனே
சந்தம் :
தத்தான தனதனன தத்தான தனதனன
தத்தான தனதனன
தனதனன தானனா
பொருள் :
திசைகளுக்கொன்றாக
எட்டுக்கைகளை உடைய சித்தர்களுக்கெல்லாம் இறைவனது நெற்றிக்கண்ணில் பிறந்த சிறுமகவோ இவன்.
மயில் போன்ற இமவான் மகளான பார்வதியின் முலைப்பாலுண்டவனோ. வீரம் மிக்க பகைவரும் உய்யுமாறு
அருளும் கார்த்திகேயனான , வானவரும் புகழும் சேனாதிபதியோ. எதிரிகளின் சேனையை அழிக்கும்
மயிலின் தொகை நிழலில் இவ்வுலகினை வலம் வரும் வேலனோ. முத்துக்களை கொண்ட வளைகள் மலிந்த
முத்தாலு நகரில் திகழும் இந்த குமரகுருபரநாதன்
Comments
Post a Comment