கவிஞர் மதார் அமர்வு - கவிதையில் சொல்லாட்சிகள்
விவாதத்திற்கான முன்குறிப்பு:
சொல் - உரைநடையில் வைக்கப்படுவதற்கும் கவிதைக்குள் வைக்கப்படுவதற்கும் மலையளவு வேறுபாடு உண்டு. சொல்லே கவிஞனின் கருவி, அதுவே அவனது சொத்து. கவிஞனின் பெரிய தொந்தரவும் கூட சொல்தான். சொல் கவிதையில் எப்படி எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதையும், புதிய சொல்லாட்சிகள் பிறக்க என்னென்ன காரணிகள் துணை நின்று உதவுகின்றன என்பதையும் ஆராய்வதே இந்த அமர்வின் நோக்கம்.
கவிதைகள்:
அ) சொல் - கவிதைக்கு உள்
கூடாரமொன்றினுள் அடுக்கிய
டம்ளர் கோபுரத்தின்மீது
பந்து எறியப்படுகிறது
டம்ளர்கள் சரிகின்றன
துளிமோதி நினைவுகள்
உதிருமே அதுபோல
பெரிய எலும்புத்துண்டை
கவ்விய டாபர்மானைப்போல துள்ளுகிறான்
எல்லாரும் கைதட்டுகிறார்கள்
கூடாரத்தின் பின்னிருந்து மீண்டும்
பழையபடி டம்ளர்களை
சோர்வோடு கோபுரங்களாய்
அடுக்குகிற கிழவனே
நீயே நீயேதான்
பழஞ்சேர்த்தி
ஞாபக அழுத்தி
நினைவடர்த்தி
மீள்மனதி
-ச.துரை
ஆ) சொல் - தனியே இயங்கி கவிதையை உருவாக்குதல்
மாயையின் பேரெழில்
தலைவாசலில் வந்து நிற்கிறது கோழி.
கண் விழித்ததும் வாழ்வினில் நுழைந்திடும்.
இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாத பாலகியென
நிலைப்படியில் நின்று பார்க்கிறது அவநியை
தயக்கமின்றி
சஞ்சலமின்றி
ஒரு குதி
குதித்து
அடுத்த படியில் கால் பதிக்கிறது:
மதி அடையா வைகறையில் மாயையின் பேரெழில்.
ஏது நினைத்ததோ ஒரு கணம் சிலைத்து வெறிக்கிறது:
நிரந்தரத்தின் ஸ்தம்பிதம்.
பின் திமிறி அடிக்கிறது றெக்கையை:
நிலையற்றதின் தித்திப்பு.
அதிமிக மெதுவாக சிறு மென் தாவல் இட்டு நிலம்சேர்கிறது:
ஒரு சமன் தேடும் சலனம்.
அதோ,கூவி ஓடுகிறதே தெருவில்
அன்னமாக்காவின் கோழி.
- சபரிநாதன்
இ)கவிதை குவிந்து ஒரு சொல்லைப் பெற்றெடுக்கும் நிகழ்வு
கீறல் விழுந்த மேஜை
தெரு முனையில்
பூ விற்கும்
பூக்கார மூதாட்டி
சில நாளாய்
அங்கு இல்லை
அவள் அமர்ந்திருக்கும்
உடைந்த நாற்காலியும்
கீறல் விழுந்த நீலநிற மேஜையும்
வர்ணம் இழந்த பிளாஸ்டிக்
வாளியும்
அங்கு இல்லை
இனி
எங்கு போய் வாங்குவேன்
நிரந்தரத்தின்
மலர்ச்சரத்தை
- தேவதச்சன்
ஈ) மரபின் தண்டவாளத்தில் நவீன சொல் ஒன்று ஓடுதல்
எதேச்சையாக பட்டுவிட்டது
உன் கைகள் எவ்வளவு நைஸாக இருக்கின்றன
இந்த நைஸிற்குத்தான் மணிமுடிகள் சரிந்தனவா
முனிகள் பிறழ்ந்தனரா
இதற்காகத்தான் இப்படி
தேம்பி தேம்பி அழுகிறார்களா
இதற்காகத்தான் இவ்வளவு ஓயாத மன்றாட்டமா
இந்த நைஸிற்காகத்தான் அம்மையப்பனை எதிர்க்கிறார்களா
செங்குருதியில் மடலிடுகிறார்களா
இதுமட்டும் போதுமென்றுதான்
கண்காணாத இடத்துக்குப் போய்விடுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான்
ஆழக்குழி தோண்டி அதில் பண்பாட்டை போட்டு மூடுகிறார்களா
இதற்காகத்தான் ஓட்டைப் பிரித்து பிறன்மனைக்குள் குதிக்கிறார்களா
இதற்கு ஏங்கித்தான் பசலை ஏறுகிறதா
கைவளை நெகிழ்கிறதா
இந்த நைஸிற்காகத்தான் "வைகறை வாளாகிறதா"
இதற்காகத்தான் எஜமானிகள் பரிசாரகர்களை அன்பு செய்கிறார்களா
முதலாளிகள் சமத்துவம் பேணுகிறார்களா
இந்த நைஸிற்காகத்தான் தென்னந்தோப்பை எழுதி வைக்கிறார்களா
இதற்காகத்தான்
தூங்கும்போது தலையில் கல்லைத் தூக்கிப் போடுகிறார்களா
இதற்காகத்தான் மனைவிக்கு விஷம் வைக்கிறார்களா
அந்த நைஸ் இனியில்லையென்றானதற்காக
தண்டவாளங்களை நோக்கி ஓடுபவர்களுக்கு
பாவம்,அதே நைஸ்தான் வேண்டுமோ.
- இசை
உ)மரபின் சொல் நவீன தண்டவாளத்தில் ஓடுதல்
பிழையான விலங்கை நாம்
ஏற்பதும், ஏற்காமலிருப்பதும்
சட்டப்படி தண்டணைக்குரியது அல்ல
நீண்டகாலத்திற்குப் பிறகு ஊர் முச்சந்திக்கு வந்தான்
வித்தைகளை வாங்கி நிற்கும் யாத்ரீகன்
தற்செயலாக நாங்கள் கேட்டோம்
ஐயா உம் பயணத்தில் பிழையான மன்னனைக்
கொண்ட
மக்களைக் கண்டதுண்டோ வென்று
பதிலுக்கு யாம் வெட்கும்படி
காற்றைப் பிளந்து கூறிட்டான்
நீரை அளவிட்டு முடிந்தான்
கற்பாறைகளை விலை காட்டினான்
நாங்கள் சினந்து வளரும் மிருகத்தைப்போல
உறுமினோம்
பிறகு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்
அதன்பின் சாந்தமாகி அது நாங்கள்தானா என்றோம்
அதுசமயம் அவன் கேட்டான்
இவ்வாறு அண்டிக்குழைந்தீர்
மதிகெட்டீர் மானமிழந்தீர்
எப்படி இதுவெல்லாம்
இன்ன விலை
இன்ன பொருள்
பார் முழுதும்
விற்க
இது வேண்டும்
கற்றது ஆரொடு சொல்லுதி விரைந்து.
- கண்டராதித்தன்
Comments
Post a Comment