கவிஞர் இசை அமர்வு: எப்படி எழுந்தனவோ

 விவாதத்திற்கான முன்குறிப்பு:

கவிதையை விளக்க முடியாது என்கிற உறுதியும், அதை விளக்கிப் பார்க்கும் முயற்சியும் ஒரு சேரவே நடந்து வந்திருக்கிறது. கவி கவிதையை விரட்டுவதும், கவிதை கவியிலிருந்து நழுவி விழுவதும் காண அழகான காட்சிகள். நானும் சில அழகான தடுமாற்றங்களை காட்ட முயல்கிறேன். ஒட்டு மொத்தமாக என் கவிதைகள் எப்படி எழுந்து வந்திருக்கக் கூடும் என்பதையும், சில குறிப்பிட்ட கவிதைகள் எழுந்து வந்த சூழல் குறித்தும் பேசிப் பார்க்க முயல்கிறேன். அந்தக் குறிப்பிட்ட சில கவிதைகள் என்னளவில் சாகசமானவை, எனக்கே ஆச்சர்யமானவை. ஆகவே அவற்றைப் பேசுவது கவிதையியலுக்கு உதவக் கூடும்.

கவிதைகள்

கவிஞர் ஆத்மாநாம் கவிதை:


1. நன்றி நவிலல்



இந்த செருப்பைப் போல்

எத்தனை பேர் தேய்கிறார்களோ

இந்த கைக்குட்டையைப் போல்

எத்தனை பேர்

பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ

இந்த சட்டையைப் போல்

எத்தனை பேர் கசங்குகிறார்களோ

அவர்கள் சார்பில்

உங்களுக்கு நன்றி

இத்துடனாவது விட்டதற்கு

                                


கவிஞர் இசையின் கவிதைகள்:

1. 

கடவுள் இருக்கிறாரா?

ஒவ்வொரு புலரியிலும்
சிரத்தையொடு மலர் கொய்து 
கடவுள்களை அலங்கரிக்கிறாள் ஒரு வனிதை

அவளுக்கு
கனவுகள் இல்லை

கண்ணீர் இல்லை

பயமும்
பக்தியும் கூட இல்லை.

இந்த உலகில்
மலர்கள் இருக்கின்றன
என்பது தவிர
அவளுக்கு 
வேறொன்றுமில்லை


2.

சுபம்

அவன் இங்கு வந்ததே

அந்த வெள்ளிக் கிழமைக்காகத் தான்

அதன்  முலையழுந்த அணைக்கத்தான்


புதன் வரை பொறுத்து விட்டான்

அதற்கு மேல் ஆகவில்லை

இந்த வியாழன் ஓர் இடைஞ்சல் 

ஒரு வாய்க்காலை தாண்டிக் குதிப்பதைப் போலே

அதைக் கடந்து விடத் துடித்தான்

தன்னை ஒருவன் தாண்டிப் போவதைப் பொறாது

வியாழன் வாய் பிளந்து கத்தியது.

வண்டி நிறைய ஆட்களை அனுப்பியது


காதலின் கனலி

சில மண்டைகளை உடைத்துப் போட்டான்

சில கால்களை முறித்துப் போட்டான்

சில தலைகளை திருப்பி வைத்தான்


கடைசியில்

ஒரு தந்திரன்

புதனின் கழுத்தில் கத்தியை வைத்துப் பிடித்துக் கொண்டான்

காலம் ஸ்தம்பித்து விட்டது

வேறு வழியற்ற காதலன்

“ வெள்ளி வேண்டும்….

 வெள்ளி வேண்டும்..” என்று

 அவன் காலில் விழுந்து கதறினான்


வெற்றி தந்த களிப்பில்

அவன் அண்ணாந்து சிரிக்க

கண் பிழைத்த அக்கணத்தில்

அவன் கால்களைப் பற்றியிழுத்து

ஓங்கித் தரையில் அடித்தான்


ஓடினான்…

வேகமெடுத்து ஓடினான்…


புதனில்  அழுந்தக் காலூன்றி

ஒரே ஒரு தாவு…


துப்பாக்கி ரவைகளுக்கும்

கையெறி குண்டுகளுக்கும் தப்பி

வெள்ளியின் நிலத்தில்

விழுந்து உருண்டான்.


3. 

குத்துபாட்டின் அனுபூதி நிலை


இந்த வீட்டின் ஜன்னல்களை மூடினேன்

கதவுகளைச் சாத்தினேன்.

மறவாமல் இவ்வுலகை

வெளியே தள்ளித் தாழிட்டேன்.


இசை துவங்கியது

பேழையிலிருந்து வெளிப்பட்ட 

குரலுருவும் நானும்

கை கோர்த்து ஆடத் துவங்கினோம்.


ஆட்டம்…

குதியாட்டம்…

பேயாட்டம்…


“ மொழ மொழன்னு யம்மா யம்மா…

  மொழ மொழன்னு யம்மா யம்மா….”


தலை வழி பீறிட்டு

விண் முட்டி அடிக்குதொரு நீருற்று


“ தட தடன்னு  நடக்குறா..

  மட மடன்னு சிரிக்குறா…

  வெட வெடன்னு இருக்குறா…

  கொட கொடன்னு கொடயிறா…

  மொழ மொழன்னு யம்மா யம்மா..

  மொழ மொழன்னு யம்மா யம்மா…’


  ஆயிரம் கரங்கள் கூடி

  ஆனந்தக் கொட்டடிக்க

  அதிரும்

  நானொரு 

 களி கொண்ட பேரிகை


“ பஞ்சு மிட்டாய் இடுப்பழகி

 ஓலக் கொட்டாய் உடுப்பழகி

 ப்பெப்பர் முட்டாய் பல்லழகி

 க்கொட்டாப் பாக்கு கண்ணழகி

 ராங்கீ… மனச வாங்கீ…”


எனதுடலா..  இது 

எனதுடலா!


இப்படி  பூரிப்பில் துடி துடிக்கும்

இது என்ன

எனதுடலா!

எனதுடலா!


எனதுளமா  இது

எனதுளமா!


ஈனக்கலலைகள் எரியும் நெருப்பில்

ஜொலிப்பது என்ன

எனதுளமா!

எனதுளமா!


4.

அங்கு

கொட்டு  கொட்டென்று

கொட்டித்  தீர்த்த இசை


சட்டென

நின்று விட்டது


நிசப்தமும் 

முழக்கத்திற்குப்  பின்னான நிசப்தமும்

ஒன்றல்ல


வாத்தியக்காரன்

வாத்தியத்திலிருந்து

கையைத் தூக்கிவிட்ட பிறகு

உருவாகும் தாளமே!


நீ

அங்கென்னைக் கூட்டிச் செல்!

5.

ஆத்மாநாமின் புதிய கவிதை 


ஒரு ரோஜா நாற்று வாங்கி வந்தேன்

 

வீட்டில்

அதற்கு எந்த இடம் பிடித்திருந்ததோ

அந்த இடத்தில் நட்டு வைத்தேன்.

 

ஒளி தந்தேன்

நீர் தந்தேன்

 

இவை தவிர

ரோஜாக்கள் பூக்க

எது முக்கியம் என்று

ஆத்மாநாம் சொன்னாரோ

அதை

அள்ளி அள்ளிக் கொடுத்தேன்.


கொடுத்துக் கொண்டே இருந்தேன்

 

வருத்தம் தோய்ந்த முகத்துடன்

ஒரு நாள் அவர் வந்திருந்தார்…

 

“ இன்னும் ரோஜாக்கள் பூக்கவில்லையா? “

 

“மணம் வர மலர் அவசியமில்லை என்று தோன்றுகிறது” என்றேன்.

 

புன்னகைத்தபடியே சென்று விட்டார். 



Comments

Popular posts from this blog

ஓசூர் கவிதை ரசனை முகாம் 2025

கவிஞர் மதார் அமர்வு - கவிதையில் சொல்லாட்சிகள்