கவிஞர் போகன் சங்கர் அமர்வு : கவிஞனாக வாழ்தல்
விவாதத்திற்கான முன்குறிப்பு:
கவிதை எழுதுதல், கவிஞனாய் இருத்தல், கவிதையை நேரிடுதல் கவிதையைக் கடத்தல், போன்ற கவிதை என்ற நிகழ்தலின் பல்வேறு நிலை மற்றும் இயங்கு புள்ளிகளை தொட்டுக்காட்டும் 10 உதாரண கவிதைகள் இவை. இவற்றில் இருந்தோ இவற்றைக் கடந்தோ நாம் நமது உரையாடலை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்
கவிதைகள்:
வாழ்வும் கலையும் - எனது கம்யூனிஸ்ட் நண்பர்களுக்கு தேவதேவன் கவிதை:
ஈயை ஈயை நோகாதே
புண்களைக் கவனி – உன்
புண்களைக் கவனி
வியர்வை நாறும் என் மேனியை
விடாயைத் தணிக்குமிக் குளிர்நீரை
இட்லிப் பார்சலை ஈரத் தரையை
பேதா பேதமற்று என் அசுத்தங்களை
எல்லாவற்றையுமே தான்
அமர்ந்து அமர்ந்து காட்டி
புண புண் என்றே எகத்தாளம் பேச
பொறுக்காத கைகள் பொங்கியெழுந்து
உடனே உடனே விரட்டும்
என் அதிருப்திக் கனலிலே அமர முடியாமல்
எழுந்த அதிர்ச்சியில்
எல்லாம் மறந்து – உடன்
புத்தம் புதுசாய் ஒரு கலை பிறக்கும்
(மேற்படி புண் பற்றி அன்றி வேறு?)
புண்ணை விட்டெழுந்த வெளியில் நின்று
நாற் பரிமாணங்களிலும் திரிந்து திரிந்து
கோலம் போடும்
என் நாற்காலி மரச்சட்டத்தில் அமர்ந்து
சற்று தியானிக்கும்
(முன்னதிலும்
புத்தம் புதுசாய் ஒரு கோலம் போட)
ஆகவே சும்மா
ஈயை ஈயை நோகாதே
உன் புண்களைத்தான்
கவனி! ஆற்று!
தேவதச்சசன் கவிதை:
தன் கழுத்தைவிட உயரமான சைக்கிளைப் பிடித்தபடி லாகவமாய்
நிற்கிறாள் சிறுமி
கேரியரில் அவள் புத்தகப்பை விழுந்துவிடுவதுபோல் இருக்கிறது
மூன்றாவது பீரியட் டெஸ்ட்க்கு அவள் உதடுகள்
சூத்திரங்களை முணுமுணுத்துக்கொண்டிருந்தன
அவள்
கண்ணுக்கு அடங்காமல்
கனரக வாகனங்கள் அவளைக்
கடந்து சென்றன
வேகமாய்த் தாண்டிச் செல்லும் பஸ்ஸில்
இன்னொரு பகலில் போய்க்
கொண்டிருக்கும் குண்டுப்பெண்
சிறுமியின் ஷூ லேஸ்
அவிழ்ந்திருப்பதைப் பார்த்தாள்
சொல்லவிரும்பிக் கை அசைத்தாள்
சிறுமிக்குக் கொஞ்சம் புரிந்தது
கொஞ்சம் புரியவில்லை.
வண்ண நிலவன் கவிதை:
மெய்ப்பொருள்
“எதையேனும் சார்ந்திரு
கவித்துவம்
தத்துவம் காதல்
இங்கிதம் சங்கீதமிப்படி
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல் உலகம்
காணாமல் போய்விடும்..!”
வண்ணதாசன் கவிதை:
தூணில் சாய்ந்து நிற்கிற அவள்
தூணை அழகாக்குகிறாள்
படித்துறையில் காலைத் தொங்கவிட்டு அமர்ந்திருப்பவன்
நதியை அழகாக்குகிறான்
குடையிருந்தும் நனைந்து செல்லும் சிறுமி’
குடையை அழகாக்குகிறாள்
எதையேனும் செய்து
ஏதாவதை அழகாக்க
எனக்கு முடிந்தால் நல்லது
பச்சைக் கதை - பிரமிள்:
கானகத்தினுள்
பசுமைச் சாறுபொங்க
துடிக்கிறது
“அல்ல, அல்ல” என்ற உன்
சொல்லின் தாளகதி.
சற்றே நிழல்களுள் சரிகிறேன்,
வழிதடுமாறாத களைப்பு.
எதிர்வரும் என் வேளைகளினுள்
உன்னைச் சிறைபிடிக்கின்றன
தீர்க்க தர்சனங்கள்.
தளிரே - என் மன எலும்பு
உன்னகத்தில் கிளைபடர
இலைமுகம் கொள்கிறாய் நீ.
நாம் எதிலும்
மறைமுகப்பொருள்களை
சர்ச்சிக்க வேண்டாம்.
எது மறை பொருள்?
இந்த உருகிய மறுப்புகளின்
உரம்தான் - அவ்வுரம்
உன்னுள் என்கிளையின்
பணியாத பக்திகளாகட்டும்
பளுவற்றுச் சிறுசிறு
பச்சைச் சிறகுகளில்
எழுந்து தத்தளிக்கட்டும்.
சிறகுகளில் சில
துடிப்பு அணைந்து
மண்வண்ணமாகும்
வீழும்.. வீழினும் உரமாகும்.
மீந்திருப்பவற்றுள்
விளைகின்றன புதர்த்தீ இருள்கள்
உணவுகள்
விஷங்கள்
முட்கள்
முட்கள்
ஸ்தாவர மான்களும் புலிகளும்.
நகங்கள் என்னைக் கிழிக்கின்றன
ஆயின் உன்
மூலிகை இலைக்கண்கள்
சிகிச்சையளிக்கின்றன.
ஹம்டி டம்டி - ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதை:
நான் திருநெல்வேலியிலிருந்து
இருபது ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு
பிழைக்க வந்தவன்.
அசாமிலிருந்து புலம்பெயர் தொழிலாளியாக வந்திருந்த ஹம்டி டம்டியை
நேற்று மாலை
நான் மைலாப்பூர் ரயில் நிலையத்தில் சந்தித்தபோது
அவன் ஓடும் ரயிலில் ஏற முயன்று
கீழே விழுந்து சற்றே புரண்டு
மரணத்திலிருந்து தப்பி எழுந்துகொண்டிருந்தான்.
ஐயோ என்று ஓடினேன்
அடுத்த ரயிலில் பொறுமையாக ஏறினால் என்ன கேடென்று
ஒரு பெரியவர்
ஹம்டி டம்டியை அடித்தார்
தகவல் போய்ச் சேர்வதற்கே ஒரு வாரம் ஆகிவிடும்
என்றார் கழுத்தில் அடையாள அட்டை மாட்டிய நடுத்தர வயது மென்பொறியாளர்
'ஜஸ்ட் மிஸ்ட்' என்று சொல்லிவிட்டு
இரண்டு கல்லூரி மாணவிகள்
வாட்ஸ்அப்புக்குள் நுழைந்துவிட்டனர் நான் ஹம்பு டம்டியின் தடித்த புட்டத்தை தட்டிக்கொடுத்து
சிரித்தேன்
ரயில்வே நிலையக் காவலர்கள் வந்தனர் ஹம்டி டம்டியை அழைத்துச்சென்றனர்
ஹம்டி டம்டி என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தபடி
போனான்
நானும் உன்னைப் போல ஹம்டி டம்டிதான் திரும்பத்திரும்ப விழுகிறேன்
முழுமையாக உடை
வதேயில்லை என்றேன்
அவனுக்கு எல்லாமே புரிந்துவிட்டது போலும்
சிரித்தான்
அவன் காவலர்களுடன் சென்றபோது அவனது ஜீன்ஸுக்குள் பிதுங்கி ஆடிய யானைப்புட்டங்கள் எனக்கு
விடுதலையின் சந்தோஷத்தை அளித்தது.
BERRYMAN(On poet Berryman)
by W.S. Merwin:
I will tell you what he told me
in the years just after the war
as we then called
the second world war
don’t lose your arrogance yet he said
you can do that when you’re older
lose it too soon and you may
merely replace it with vanity
just one time he suggested
changing the usual order
of the same words in a line of verse
why point out a thing twice
he suggested I pray to the Muse
get down on my knees and pray
right there in the corner and he
said he meant it literally
it was in the days before the beard
and the drink but he was deep
in tides of his own through which he sailed
chin sideways and head tilted like a tacking sloop
he was far older than the dates allowed for
much older than I was he was in his thirties
he snapped down his nose with an accent
I think he had affected in England
as for publishing he advised me
to paper my wall with rejection slips
his lips and the bones of his long fingers trembled
with the vehemence of his views about poetry
he said the great presence
that permitted everything and transmuted it
in poetry was passion
passion was genius and he praised movement and invention
I had hardly begun to read
I asked how can you ever be sure
that what you write is really
any good at all and he said you can’t
you can’t you can never be sure
you die without knowing
whether anything you wrote was any good
if you have to be sure don’t write
மற்றதெல்லாம் விஷயமேயில்லை - பெருந்தேவி கவிதை
கவிதை எழுத எனக்கு
நாள் நட்சத்திரம் வேண்டாம்
நேரம் காலம் வேண்டாம்
எனக்கே எனக்கான அறை
மேலதிக வசதிதான்
ஏன், பத்திரிகை வேண்டாம்
பேஸ்புக் போதும்
பூசலார் நாயனார் மனதுக்குள்ளேயே
கட்டிக் காட்டியிருக்கிறார்
விமானத்தையும் சிகரத்தையும்
மதிலையும் திருக்குளத்தையும்
கவிதையின் கோயில்
அவ்வாறே அமைகிறது
ஒரு கவிஞருக்கு வேண்டியதெல்லாம்
உள்ளே
அப்பாலான
கோபுரத்திலிருந்து
அழைக்கப்படும்போது
எங்கே பறந்துகொண்டிருந்தாலும்
திரும்பத் தயாராக இருப்பது மாத்திரமே
ஆனால் அதற்கு நீ
முதலில் ஒரு புறாவாக இருக்கவேண்டும்.
பசுவய்யா கவிதை:
என் நினைவுச் சின்னம்
நான் விடைப் பெற்றுக்கொண்டு விட்ட செய்தி
உன்னை வந்து எட்டியதும்
நண்ப பதறாதே
ஒரு இலை உதிர்ந்ததற்கு மேல்
எதுவும் இதில் இல்லை
இரங்கற் கூட்டம் போட
ஆள் பிடிக்க அலையாதே
நம் கலாச்சாரத் தூண்களின்
தடித்தனங்களை எண்ணி
மனச்சோர்வில் ஆழ்ந்துக் கலங்காதே.
நண்ப,
சிறிது யோசித்துப் பார்
உலகெங்கும் கணந்தோறும்
இழப்பின் துக்கங்களில்
ஒரு கோடி கண்கள்
கலங்குகின்றன
ஒரு கோடி நெஞ்சங்கள்
குமுறி வெடிக்கின்றன
நண்ப,
நீ அறிவாயா?
உன் அடிச்சுவடு
ஒவ்வொன்றிலும்
அழிகின்றன ஒரு கோடி உயிர்கள்
இருப்பினும்
நண்ப
ஒன்று மட்டும் செய்
என்னை அறியாத உன்
நண்பனிடம்
ஓடோடிச் சென்று
கவிதை எழுப்ப முயன்றுக்கொண்டிருந்தவன்
மறைந்துவிட்டான் என்று மட்டும் சொல்.
இவ்வார்த்தைகளை நீ கூறும்போது
உன் கண்ணீர்
ஒரு சொட்டு
இந்த மண்ணில் உதிரும் என்றால்
போதும் எனக்கு.
லட்சுமி மணிவண்ணன் கவிதை:
ரொம்ப நேரத்திற்கெல்லாம் நான் யாரையும் எதிர்பார்க்கவில்லை
துண்டு துண்டாக
கொஞ்சம் அழகாய் இருந்தால் போதுமானது
சில கணங்கள் தெய்வமாயிருந்தால் சந்தோஷம்
போகிற போக்கில் இயல்பாய் இருந்தால்
போதும்
அந்தந்த இடத்தில்
அவ்வளவு சரியாக இருந்து கொள்கிறேன்
ஒரு பைத்தியக்காரனுக்கு துணிந்து நீ
முத்தமிட்டு திரும்புகையில்
சிறிது நேரத்திற்கு
தெய்வமாயிருந்தாய் என்பதை
அருகமர்ந்து
சொல்லித் தருகிறேன்
தேவியாய் இருக்கையில் வா
வந்தமர்
பணிவிடை செய்கிறேன்
ஒட்டுமொத்தம் எனக்கு
தேவைப்படாது
சிறுதுண்டு
நீ தெய்வமாய் எழுந்த
சிறுதுண்டு.
Comments
Post a Comment