கவிஞர் ஆனந்த் குமார் அமர்வு: தற்கால மலையாள கவிதைகள்

 விவாதத்திற்கான முன்குறிப்பு:

இந்திய இலக்கியங்களில் தமிழ் சூழலுக்கு மிகவும் அணுக்கமானதும் அதிக வாசகப்பரப்பு கொண்டதும், அதேசமயம் அணுக அணுக அதன் கலாச்சாரக் கூறுகளால் தமிழ் மனதிற்கு அந்நியமாகவும் ஆகிவிடும் தன்மை கொண்டவை மலையாள இலக்கியமும் கவிதைகளும். மலையாளக் கவிதைகளைப்‌ பொறுத்தவரை 2010 வரையிலான முக்கியமான கவிஞர்கள் ஏற்கனவே தமிழில் ஓரளவுக்கு அறிமுகமானவர்கள். அதன் பிறகான மலையாளக் கவிதைகள் அதிக அளவில் தமிழுக்கு மொழிபெயர்க்கப் படவில்லை.

சமீபத்தில் பட்டாம்பியில் நிகழ்ந்த கவிதை திருவிழாவில் மலையாளத்தில் தற்போது எழுதும் இளம் கவிஞர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நடந்த உரையாடல் மற்றும் மொழிபெயர்த்த சில கவிதைகளை முன்வைத்து தற்கால மலையாள கவிதைப் போக்கு குறித்தான இந்த உரையாடலை நிகழ்த்தலாம் என நினைக்கிறேன். 

ஒரு மொழிச்சூழலின் கவிதைப் போக்கை முன்வைப்பதற்கு மிக விரிவான வாசிப்பும் கூர்மையான தேர்வும் அவசியம். அப்படி இல்லாமல் மிகக்குறைந்த காலத்தில் நிகழ்ந்த இந்த வாசிப்பிலும் தேர்விலும் மிகச்சில கவிஞர்களையே இங்கு முன்வைக்க முடிகிறது. இவை அல்லாமல் மேலும் சில‌ கவிதைகளையும், அதிலிருந்து பொதுவான கவிதை சார்ந்த பார்வையையும இந்தக் கூடுகையில் நிகழ்த்த முயற்சிக்கலாம்.


கவிதைகள்

I. எஸ். அபிராம் கவிதைகள்

1. சிறகு


உங்கள் செவிகள்

அவை சிறகுகள்

 

பரிணாமத்தின்

வேகத்திலோ தாளத்திலோ

நிகழ்ந்த ஒரு தவறு

 

தவறான பட்டுக்கூட்டிற்குள்

நீங்கள் மாட்டிக்கொண்டீர்கள்

 

உடல் பெரிதும்

செவிகள் சிறிதுமாக

யுகங்களின் பிரளயம்

 

பரிணாமத்தின் வேகம் கூடி

சிறகுகள் கேள்விகளாயின

 

என்ன  சந்தேகம்?

ஒருநிமிடம்

முகத்தை மறந்து

ஒரு ஜோடிக் காதுகளை

கற்பனை செய்து கொள்ளுங்கள்

 

வண்ணத்துப்பூச்சி

  -----

2. பூஜ்யம்


கச்சிதமான ஒரு பூஜ்யத்தை

ஒருபோதும் வரைய முடிந்ததில்லை

உதடுகள் கோணி, கழுத்து சரிந்து

வேறொன்றாகிவிடும்

 

பூஜ்யத்தை வரைந்துவிடும்

மகாவித்தைதான் யாது?

 

எப்பொழுதுதான் வரைய இயலும்

கொக்கின் அலகு

வயலில் வரைவதை போன்ற

ஒற்றைப் பூஜ்யத்தை.

------


II. அசோகன் மரையூர் கவிதைகள்

 

1. யாத்திரை

அலையின் மேல்

எங்கும் சேராமல் பயணித்துகொண்டிருக்கும்

ஒரு பொருளைப் போல

காட்டில் எனக்கு மிக அருகில்

காய்ந்த கிளையில்

குருவி ஒன்று ஆடிக்கொண்டிருக்கிறது

 

எனது மடியில் இருக்கும்

இந்தப் புத்தக வடிவில்

நீயும் நானும்

சேர்ந்தே பயணிக்கிறோம்

 

நானும் அப்பறவையும் நீயும்

இவ்வுலகின் கடைசி மனிதனைப்

போய் பார்க்கிறோம்

 

அந்த மனிதன்

சொல்கிறான்

நாம் பயணிக்கும்

இந்த சிறிய தூரத்திற்கு

எவ்வளவு நரைமையென 

-------

2. வெயில் பருந்து

 

பருந்துகள் வட்டமிட்டு பறந்து

அந்த பிரதேசத்தை

சுருக்கிச்சுருக்கி

சிறியதொரு பந்தென ஆக்குகின்றன

 

அந்தப் பந்தை

முற்றத்தில் அமர்ந்து

நெல்மணிகள் புடைக்கும்

பாட்டியின் முறத்தில்

நிழல்களென

இட்டு விளையாடுகின்றன

 

உரலில் வெற்றிலை குத்துகையில்

பாட்டி இடையிடையே

கழுத்தில் கட்டிய தாயத்தை எடுத்து

பின்னால் போடுகிறாள்

 

அதனுள் ஒரு

முந்நூறாண்டுகளின்

வசந்தங்கள்

------

III. கார்த்திக்.கே கவிதைகள்


1. கண்டுபிடிப்பு


புகழ்பெற்ற அந்த ஊரில் 

தன்னுடைய கால் தடங்களையே

ஓவியமாய் வரைய

ஒரு ஓவியன் துணிந்தான்.

 

அதைக்கண்டு உத்வேகமுற்று 

தன்னுடைய கால்தடங்கள் குறித்து

வர்ணித்து கவிதை எழுத

அங்கே

இன்னொருவன் தோன்றினான்.

 

இப்படி நிறைய பேர் தோன்றவும் 

கால் தடங்கள் குறித்தே

பாடல்கள் பிறந்தன

நாடகங்கள் உருவாகின

ஆடல் சிற்பங்கள் உண்டாயின

கலாகாலட்சேபம் நிகழ்ந்தது.

 

கேள்விப்பட்டு,

இவற்றை கண்டுகளிக்க

அவ்வூருக்கு

சுந்தரி ஒருத்தி

கால்நடையாய் வந்தாள்.

 

எல்லோரும் வந்தவள் 

பாதங்களைப்‌ பார்த்திருந்தார்கள்

அவள் அவற்றை

எதுவாகவும் ஆக்கியிருக்கவில்லை

ஆனாலும்

அங்கிருந்தவரெல்லாம்  

ஓராயிரம் செருப்புகளாய் மாறி

'என்னை அணிந்துகொள்..

என்னை அணிந்துகொள்..'

என்று அவளிடம்

சொல்லத்தொடங்கினர்

----------

2. காலம் செல்லச்செல்ல

மனிதன் கனிவுள்ளவனாகிறான்


சிறு குழந்தைகளுக்கு ஊட்டும்போது

அவர்கள்

தண்ணீர் பருகும் தேக்கரண்டிகளுக்கு

அடம் பிடிப்பார்கள்

 

நான் அப்படி அடம்பிடிக்கையில்

அப்பா

கரண்டியை ஒளித்துவைத்துவிட்டு

‘அதைத் திருடன் கொண்டுபோய்விட்டானே’

எனச் சொல்வதை கேட்டிருக்கிறேன்

 

நானே தனியாக

அள்ளியுண்ணத் தொடங்கியபின்

நேற்று

ஒரு குழந்தையின் அப்பா

கரண்டியை ஒளித்துவைத்துவிட்டு

‘அது அந்தத்

தண்ணீரிலே கரைந்துவிட்டதே’

எனச் சொல்வதை கேட்டேன்

 

சாப்பிட்டு முடிக்கும் முன்பே

நான் புரிந்துகொண்டேன்

காலம் செல்லச்செல்ல

மனிதன் கனிவுள்ளவனாகிறான்

 -----------

IV. அம்மு தீபா கவிதைகள்


1. பிறவிகள்

 

உறக்கத்தில்

வரையாடுகளுடன் சேர்ந்து

செங்குத்தான மலையேறிச் சென்றேன்

 

போன பிறவியில்

நானொரு வரையாடாய்

இருந்திருக்க வேண்டும்

 

ஆனாலும்

அடுக்களையின் இந்த

நனைந்த தரை

குளம்புகளுக்கு நல்லதல்ல

 

இன்று சறுக்கிவிழப் போனேன்

 -----------

2. நீர்பயம்

 

நீரில் விழுந்து

இறந்த பெண்

இரவுகளில்

உருண்டும் புரண்டும் கிடந்தாள்

 

வானிலெங்கோ

மாபெரும் நீர்மலர் ஒன்று

மலர்ந்து விரிவதை

அதன் பெரிய சுருண்ட இதழ்கள்

நிலவொளியில்

பயங்கரமாய் பிரகாசிப்பதை

அவள் பார்த்தாள்

 

வெள்ளத்தோடு போரிடுகையில்

சூரியனை நோக்கிக் குதித்த

கூந்தப்பனையின் முடிச்சுருளை

பார்க்க அவளுக்கு ஏக்கமாயிருந்தது

 

கூந்தப்பனையில் முடி  ஒருநாள்

அவளுக்கு வாய்க்குமென

பாட்டியொருத்தி முன்பு

வாழ்த்தியிருக்கிறாள்

 

அவள் பாட்டியை நினைத்தாள்

 

தண்ணீர் அவளது முடிக்கற்றையைப்

பிடித்து தாழ்த்தியது

 

மலர்

குவிந்து மூடியது

 -------------

3. மோட்சம்

 

இறந்து போன தாத்தா

வீட்டைப் பார்த்துக்கொள்ள

ஒரு கிருஷ்ணப்பருந்தை

அனுப்பியிருந்தார்

 

வீட்டின் உச்சந்தலைக்கு மேல

எப்போதுமது

வட்டமிட்டபடி இருந்தது

 

தினமும்

வெயிலினை மங்கச்செய்தபடி

புலரியிலிருந்து மாலைவரை

அதன் கீச்சொலிகளால்

நாய்களை திடுக்கிடச்செய்தது

 

“செத்தாலும் நிம்மதி

தரமாட்டான் கிழவன்”

 

முதல் திதிக்கு பாட்டி

ஒரு கோழிக்குஞ்சை

பொறியில் வைத்தாள்

 

பருந்து கீழிறங்கி

பொறிக்கு வந்தது

 

மிகச்சரியாக உச்சிப்பொழுதில்

ஈரத்துணி உடுத்தி

ஓராண்டுப் பசியுடன்

தத்தா வந்தார்

 

நெருப்பில் சுட்டு

நல்ல காரம் சேர்த்து வரட்டி

தலைவாழை இலையில்

பருந்தை

பறிமாறிக்கொடுத்தாள் பாட்டி

 -----------

V. அமித் கவிதைகள்

                                             

1. நர்த்தகன்

 

ஒரு நர்த்தகன்

ஆடாத தருணத்தில்

இறகுகளை அடுக்கும் பறவையென

அசைவுகளை பூட்டுகிறான்


எத்தனை மலர்கள்

விரல்களில்

விரியாமல்

வாடாமல்

 

அவன்

கண்களை மூடுகிறான்.

 

நூற்றியெட்டு மேடைகளில்

ஆடிய போதெல்லாம்  

இன்னுமொரு தடம்வைக்க

சாத்தியம் இருந்ததை

சட்டென உணர்கிறான்

 

அமைதியாய் மிதக்கிறான்

ஏதோ நடனத்தில்

----------

2. நிற்றல்

 

பாதி உடலில்

ஒரு பாம்பு

எழுந்து நிற்கிறது

தன்னந்தனியாய்

 

மண்ணில் இருந்து

ஆகாயத்திற்கு

ஊர்ந்து ஏறி

வீழாமல் நிற்கிறது

 

பாழ்வெளிக்கு

முகம் காட்டி

 

கைகால்கள்  விரித்து

கைகால்கள் இல்லாமலும்

 

பாதி விண்ணிலும்

பாதி மண்ணிலுமாக

ஒரு பிரார்த்தனை

 

சாத்தியமான உயரத்தில்

தியானம் போன்ற நடனத்தில்

விரல்களில் நின்று

நான்

நிகழ்த்துவது போல்

 

 

 

 

 

 

 

Comments

Popular posts from this blog

ஓசூர் கவிதை ரசனை முகாம் 2025

கவிஞர் இசை அமர்வு: எப்படி எழுந்தனவோ

கவிஞர் மதார் அமர்வு - கவிதையில் சொல்லாட்சிகள்