சரண்யா அமர்வு: கவிதை வாசிப்பின் நுழைவாயிலில்
விவாதத்திற்கான முன்குறிப்பு:
கவிதை புரியவில்லை என்று சமீப காலமாக பார்க்கும் எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருக்கிறேன். அதை விட்டுவிடவும் முடிவதில்லை. கவிதை இன்னது என்று ஒருவாராக தெளியும் தோறும் அது அது அல்லாமல் ஆகிறது. புதிய வாசகராக கவிதையை அணுகுவதில் இருக்கும் குழப்பங்கள், முன்முடிவுகள், இப்படி அணுகி இருக்க வேண்டாம் என்று பின்னர் அறிந்து கொண்டவை, ஆகியவற்றைப் பேசும் அமர்வாக இது இருக்கும்.
கவிதைகள்:
1. தேவதேவன் கவிதை:
கும்மாளம்
சகலமும் மயங்கிச்
சித்திரமாய்ச் சமைய
மரத்தடியில் தன்பாட்டுக்குக்
குழல் வாசித்துக்கொண்டேயிருக்கிற
கண்ணன்
படம் வரைந்து முடித்து
கழுவிக் குவளையில் போட்ட
தூரிகையாய் இருக்கையில்,
மூளைக்கு மேலே
தொங்கும் விளக்குச் சுடரின்
மின்னலடித்த ஒளியில்
பளிச்சிட்டது:
கூட்டங் கூட்டமாய்க்
கும்மாளியிட்டுச் சிரிக்கும்
குளித்துக் கரையேறாத
கோபியர்கள்!
'ரூமப் பூட்டிட்டு
எங்க கெளம்பியாச்சு தொர?'
'ஆடைகளைக் கவர்ந்துவர'
2. தேவதேவன் கவிதை:
இருள்ஒளி
கேள்வி இருளுக்கு
ஒளி பதிலானது
எவ்விதம்?
இருளை உற்று நோக்க நோக்க
இருளே ஒளியாயிற்று.
ஒளி நோக்கும்
உந்தலற்று அற்று
ஒளியே இருளாயிற்று.
இவ்விதமே
இருளும் ஒளியும் ஒன்றாகி
பேரொளி.
கேள்வியும் பதிலும் இணைந்து
பெரு வியப்பு.
3. அக்கமகாதேவி கவிதை - தமிழில் பெருந்தேவி:
வீடு வீடாகப் போய்க் கைநீட்டி வேண்ட வை ஐயனே
வேண்டினாலும் கொடுக்காதபடி செய் ஐயனே
கொடுத்தாலும் நிலத்தில் விழச் செய் ஐயனே
நிலத்தில் விழுந்தாலும்
நான் எடுத்துக்கொள்ளும் முன்பே
நாயை எடுக்கச் செய்
சென்னமல்லிகார்ச்சுனனே.
4. வேணு வேட்ராயன் கவிதை:
தனிமையில் வளரும் நள்ளிரவு நிலா.
உறக்கத்தில் புரளும் கடல் அலைகள்.
அலை அலையாய் மோதி செல்லும் மழைக்காற்று.
கருவறையில் உதைத்து விளையாடும் செல்ல குழந்தைகள்.
மின்னல் இடும் கணப்பொழுது கோலங்கள்.
மௌனமாய் விழித்திருக்கும் இரவு...
5. ஆத்மாநாம் கவிதை:
விடுதலை
கண்ணாடிச் சிறைக்குள்
கண்ணாடிச் சிறை
அக்கண்ணாடிச் சிறைக்குள்
நான்
அக்கண்ணாடிச் சிறையைத்
திறந்து
வெளிவர முயல்கிறேன்
திறக்கும் வழியே இல்லை
எரிச்சலுற்று
உடைத்து வர
நினைக்கிறேன்
உள் மனப் போருக்குப் பின்
முயற்சியை விடுத்து
சும்மா இருக்க முடிவெடுக்கிறேன்
கண்மூடித் திறக்குமுன்
கண்ணாடிச் சிறையைக் காணோம்
எங்கும் முன்பிருந்த அதே ஒளி
6. தேவதச்சன் கவிதை:
நான்
அங்கும் இங்கும்
அலைகையில்,
அப்படியும் இப்படியும்
மாறுகிறேன், அனுபவம்
சேர்கிறது, இல்லையா
நான்
அங்கும் இங்கும்
அலைகையில்
அங்கும் இங்கும்
மாறுகின்றன, அனுபவம்
சேர்வதில்லை, இல்லையா
Comments
Post a Comment