கவிஞர் விஜயகுமார் அமர்வு: கவிதைகளில் இருத்தலியல்
விவாதத்திற்கான முன்குறிப்பு:
நான் யார்?
இந்தக் கேள்விக்கு யார்யாரிடமெல்லாம் எதனிடத்திலெல்லாம் நம்மிடத்திலேயும் கேட்டால் என்ன பதில் கிடைக்குமோ அல்லது கிடைக்காதோ அது குறித்த சுயவிசாரனை அல்லது பரிசீலனயே இருத்தலியல் எனலாம். கவிதைகளில் தன்னிலை அறிதல், தன்னிலை மறத்தல் ஆகியவை இருபெரும் பாடுபொருட்கள். இருத்தலியலுக்கும் தமிழ்க் கவிதைக்குமான தொடர்புகள் என்ன என்பதை விவாதிப்பதே இவ்வுரையின் நோக்கம்.
கவிதைகள்:
1. மனுஷ்ய புத்திரன் கவிதை:
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்
நாம் ஏன் இப்படி
இருக்கிறோம்
சதா முணுமுணுத்துக்கொண்டு
எப்போதும் துணிகளை மடித்துக்கொண்டு
எதையாவது சுத்தம் செய்துகொண்டு
யாரையாவது சபித்துக்கொண்டு
எதையாவது அடைய முயற்சித்துக்கொண்டு
எதனிடமாவது தோல்வியடைந்துகொண்டு
எப்போதும் நம்மை நிரூபித்துக்கொண்டு
ஒரு சிகரெட்டைப்போல எரிந்துகொண்டு
தேவையற்ற பொருட்களால்
நம் தனிமையை நிரப்பிக்கொண்டு
யாரிடமாவது நம்மைப் பிணைக்க முயற்சித்துக்கொண்டு
ஒரு அபத்தமான சினிமாவின்
முதல் காட்சியைப் பார்த்துக்கொண்டு
கடற்கரையில் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றுகொண்டு
நம் குழந்தைகளை சந்தேகித்துக்கொண்டு
நம் வீட்டிலேயே திருடிக்கொண்டு
கண்ணாடியின் முன்
சுயமைதுனம் செய்துகொண்டு
மலிவான பொருட்கள் எங்கே கிடைக்கின்றன என்று
எப்போதும் யோசித்துக்கொண்டு
பொறுக்கிகளுக்குப் பயந்துகொண்டு
புகழுள்ள மனிதர்களை
அனாவசியமாய்த் தெரிந்துகொண்டு
சதா எதேனும் ஒரு நோயைப்பற்றி பேசிக்கொண்டு
எப்போதும் பருவநிலையினைப் பற்றி
புகார் செய்துகொண்டு
சிறிய வருமானத்திற்கான
சிறிய கணக்குகள் எழுதிக்கொண்டு
அதிர்ஷ்டத்தின் வருகையை எதிர்நோக்கிக்கொண்டு
யாருடைய சாவுக்காவது காத்துக்கொண்டு
நமது தூக்குக் கயிற்றின் உறுதியைச் சோதித்துக்கொண்டு
முட்டாள்களின் கவிதையைப் படித்துக்கொண்டு
குடிக்கும்போது அழுதுகொண்டு
புணர்ச்சியில் வேறு யாரையோ நினைத்துக்கொண்டு
அடுத்த முதல்வர் யார் என்று யோசித்துக்கொண்டு
சிறுவர்களையும் சிறுமிகளையும்
ரகசியமாக முத்தமிட்டுக்கொண்டு
பௌர்ணமி தினங்களில்
மனம் உடைந்து அழுதுகொண்டு
எதையாவது தொலைத்துக்கொண்டு
எதையாவது தேடிக்கொண்டு
தவறான முடிவுகளுக்காக வருந்திக்கொண்டு
தவறிப்போன சந்தர்ப்பங்களுக்காக ஏங்கிக்கொண்டு
யாருடைய அன்புக்காகவாவது ஏங்கிக்கொண்டு
யாரையாவது இணங்கச் செய்துகொண்டு
கடன் கொடுப்பவர்களிடம் நட்பு பாராட்டிக்கொண்டு
சிறிய தவறுகளுக்கு
பெரிய தண்டனைகள் கொடுத்துக்கொண்டு
பிறரது கடிதங்களைத் திருடிப் படித்துக்கொண்டு
தன் வழியே போகும் எறும்புகளை
நசுக்கி அழித்துக்கொண்டு
கூண்டுகளில் பறவைகளை அடைத்து வைத்துக்கொண்டு
போலிக் கடவுள்களிடம் கண்ணீர் சிந்திக்கொண்டு
எதிர்காலத்தை அவ்வளவு உறுதியாய்
திட்டமிட்டுக்கொண்டு
தூக்க மாத்திரைகளை விழுங்கிக்கொண்டு
மற்றவர்களின் கடமைகளை
நினைவூட்டிக்கொண்டு
நமது இயலாமையை மறைக்க
யாரையாவது சவுக்கால் அடித்துக்கொண்டு
பூனைகளுக்கு உணவுதர மறுத்துக்கொண்டு
யாரையாவது இறுகப் பற்றிக்கொண்டு
உடல் குறைபாடுகளைப் பற்றி சிந்தித்துக்கொண்டு
மலிவான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்திக்கொண்டு
யாருடைய உள்ளாடையையோ திருடி முகர்ந்துகொண்டு
பொது அறிவை வளர்த்துக்கொண்டு
எதற்காவது பயன்படுமென்று
எல்லாவற்றையும் பாதுகாத்துக்கொண்டு
சொற்பொழிவுகளில் கைதட்டிக்கொண்டு
நிழல்களுக்குப் பயந்துகொண்டு
எப்போதும் யாரையாவது கண்காணித்துக்கொண்டு
உடல் பயிற்சியினால்
மரணத்தை வெல்ல முயற்சித்துக்கொண்டு
எளிய இரக்கங்களால் நம் மனிதத் தன்மையை
நிரூபித்துக்கொண்டு
தங்க முலாம் பூசப்பட்ட
போலி ஆபரணங்களை அணிந்துகொண்டு
அவமதிப்புகளைப் பொருட்படுத்தாமலிருக்க கற்றுக்கொண்டு
புகைப்படங்களைப் பாதுகாத்துக்கொண்டு
திறக்க மறுக்கும் கதவுகளைத் தட்டிக்கொண்டு
வேலைகளுக்குள் நம்மை நாமே மறைத்துக்கொண்டு
நம் பால்யத்தை நினைவுகூர்ந்துகொண்டு
ஒரு மூலையில் சுருண்டு படுத்துக்கொண்டு
வேறு வழியில்லை என்று எழுந்துகொண்டு
யாருக்காகவோ தியாகம் செய்துகொண்டு
எளிய உணர்ச்சிகளுக்காகப் பலியிட்டுக்கொண்டு
எப்போதோ நன்றாக இருந்தோம் என்று நினைத்துக்கொண்டு
எப்போதோ நன்றாக இருப்போம் என்று நினைத்துக்கொண்டு
சாதாரணமானவற்றை சிறந்ததென ஏற்றுக்கொண்டு
மன்னிக்க முடியாதவற்றை
மன்னித்துக்கொண்டு
நாம் ஏன்
இப்படி இருக்கிறோம்
மறுமொழி
யார் என்ற உன் கேள்விக்கு மறுமொழியை யார்தான் தரமுடியும் வானத்தை ஒரு பெயராக
யார்தான் உச்சரிக்க முடியும்
மலைத்தேனீக்கள் உறங்கும் இவ்விரவிலும்
தேன்கூடு தன்னைத் தானே கட்டிக்கொள்கிறது
எங்கிருந்தோ பூந்தாதுகள்
பாழ்வீட்டை நிறைக்கின்றன
தன் உடலையே கொடியாக்கி நிலா அசைகிறது
மனிதர்கள் மேல் வன்மம் தொடங்கும் முன்பு
கடவுளரின் தேர் இப்படித்தான் நகர்ந்திருக்கும்
சத்தமில்லாமல்
இரவில் அமுதமாகவும்
பகலில் நிழலாகவும்
நிராதரவான இடைப்பொழுதில்
ஆட்டுக்குட்டியாக என்னை
ஏந்தும் கைகளாகவும்
ரூபம் கொள்ளும் ஒன்றை
யார்தான் ஒரு பெயருக்குள்
பூட்டிவைக்க முடியும்.
3. சபரிநாதன் கவிதை:
எனது ஊர் சிறியதாகிவிட்டது
அங்கிருந்த எனது மலை குள்ளமாகிவிட்டது
கம்மாயில் ட்ராக்டர்கள்
கரம்பை அள்ளுகின்றன
அதில் என்னோடு மீன்பிடித்த சிறுவர்கள் காணாமல் போயினர்
பேரழகிகள் எங்கே என்று
அவர்களுக்கே தெரியாது எல்லாவற்றுக்கும் சாட்சியாக
நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்?
4. றாம் சந்தோஷ் வடார்க்காடு - அவர்களின் கவிதை
எதைக் கற்றும்
எந்த லாபமும் இல்லை
எதைப் பயின்றும்
எந்த மாற்றமும் ஏற்படவில்லை
எதன் பொருட்டும் நீ பலியாவதை
நான் விரும்புவதில்லை என்று
அந்தக் கண்ணாடி முன்
ஒருதரம் சொன்னேன்
அது அழுதது; நான் சிரித்தேன்.
5. தேவதச்சன் கவிதை:
என் நூற்றாண்டு
துணியால் வாயைப் பொத்தி அழுதபடி ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்துவிட்டது
படிவங்களை நிரப்பத் தெரியாமல்
ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்துவிட்டது
தண்டவாளத்தில்
ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று கையசைத்துக்கொண்டிருக்கிறான்
என் ட்ரெயின் நகர்ந்துவிட்டது
எவ்வளவு நேரம்தான்
நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ அவ்வளவு நேரம்
6. போகன் சங்கர் கவிதை:
கவிஞன் முதலில் தன்னைப் பற்றி எழுதுகிறான்.
பிறகு தன் காதலியைப் பற்றி.
பின்பு இயற்கையை நோக்கிப் போகிறான்.
அதன்பின்பு
தத்துவத்தின் மீது அவன் கண் விழுகிறது.
பிரபஞ்சத்தின் ரகசியங்கள் மீது.
கவிஞன்
ஒருமுறை
தன் வீட்டிலிருந்து இறங்கி
தெருவில்
காணாமற்போய்விட்டான் எனில்
வீடு திரும்புவதே இல்லை.
7. இசையின் கவிதை:
குணா (எ) குணசேகரன்
காணவில்லை
பெயர்: குணா (எ) குணசேகரன்
அடையாளம்: கன்னத்தில் காசளவு
மச்சமொன்று காணப்படும்
காணாமல் போனபோது
நீல நிற டீ-ஷர்ட்டும்
கறுப்பு நிற பேண்டும்
பேருந்து நிலையச் சுவரொட்டியைப் படித்து
முடித்துத் திரும்பியபோது
எதிரே குணசேகரன் நின்றுகொண்டிருந்தான்
சற்றே மனநிலை பிசகியவர்
எனக் குறிப்பிடப்பட்டிருந்தபடியால்
தயக்கத்தோடே அணுகினேன்
ஏகாதிபத்தியத்தின் அத்துமீறல்களுக்கும்
ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராய்
கண்டனம் சொன்னான்
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து
வருத்தம் தெரிவித்தான்
புறநானூற்றின் 'தொடித்தலை விழுத்தண்டினார்'
பாடலொன்றைக் குறிப்பிட்டுப் பேசினான்
பிகாஷோ ஓவியங்களைப் பார்த்திருக்கிறீர்களா என
வினவினான்
பாவம் அந்த வீடு
குணாவை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறது
பாவம் குணா
அந்த வீட்டை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறான்
வயிற்றை நிரவிக்காட்டி
பசிக்குது என்றவனுக்கு
உணவுபசரித்துக் கொண்டிருக்கிறேன்
காண்போர் தகவல் தெரிவிக்க வேண்டிய
தொலைபேசி எண் ஒன்று
சுவரொட்டியின் கீழே தரப்பட்டுள்ளது
நீங்கள் சரியென்று சொன்னால்
அவனை வீட்டில் சேர்த்துவிடலாம்
8. வெய்யில் கவிதை:
தன்னையறியாமால் பாடும் நா
அப்பா, அறுவடை நாளில் அதுவும்
வயலின் நடுவே நான் பிறந்தேன்
கழனியில் தாமரைகள் பூத்திருந்தனவாமே?
பனியில் கழுவிய கதிர்அரிவாளால்தான்
சூல்கொடி அறுத்தீர்களாம்....
களிப்பின் ரத்தச்சகதியில் மீன்கள் துள்ளி விளையாட
சூரியன் முதல் முத்தமிடட்டும் என்று
சிரசுக்கு மேலே எனை ஏந்திப் பிடித்தீர்களாமே
அச்சமயம் குலவையிட்டவர்களுக்கு
சீனிக்கிழங்கும் பருத்திப்பாலுமா
ருசிக்கக்கொடுத்தீர்கள்? அப்பா...
பிறகு நிலம் வறண்டது
பித்தளைப் பாத்திரங்களை அடகுவைத்து வீடு திரும்பும்போது l
அம்மாவிற்கு பரோட்டா வாங்கிவந்தோமே
அந்த ராத்திரியில் தழுதழுக்கும் குரலில்
பட்டுக்கோட்டையின் பாடலை
எவ்வளவு நம்பிக்கையோடு பாடினீர்கள்
அது தோற்றுப்போகிறவர்களின் பாடலா அப்பா?
மகள் பிறந்திருக்கிறாள்
உங்களின் புதைமேட்டில் அவள் வளர்க்கும் பனை
வடலிப் பருவத்திலிருக்கிறது
கொஞ்சம் பணம் அனுப்புகிறேன்
கடிதங்கள் எழுதுகிறேன்
எனக்கு வாய்விட்டு அழத்தெரியும் என
உங்கள் மருமகளுக்குத் தெரியாது
நம்பிக்கையோடுதான் இருக்கிறேன்
ஆனாலும் வெப்பமடங்காத அந்திச்சாலையில்
பெரிய பெரிய கட்டடங்களை
வெறித்தபடி நடக்கையில்
என்னையறியாமல் என் நா
அந்தப் பாடலை ஏன் பாடுகிறது?
அந்த ராகத்திற்கு இந்த மனம் ஏன் அலைகிறது?
உண்மையைச் சொல்லுங்கள்
அது தோற்றுப்போகிறவர்களின் பாடலா அப்பா?
- வெய்யில்
Comments
Post a Comment